ஆந்திராவில் தொழில் தொடங்க ஜப்பான் குழுவினர் ஆய்வு
ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க 50 ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் நேற்று விஜயவாடா, குண்டூர் ஆகிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமைய உள்ள தூளூரு, மங்கலகிரி, தாடேபல்லி கூடம் ஆகிய இடங்களில் 2,500 க்கும் மேற்பட்டதொழிற்சாலைகளை நிறுவ ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஜப்பான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், 35 ஜப்பான் நிறுவனங்களைச் சேர்ந்த 50 பிரதிநிதி கள் ஆந்திராவுக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று விஜயவாடா, குண்டூர் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விஜயவாடாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மாநில வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினர்.
இந்தியாவில் தமிழகத்துக்கு அடுத்தபடியாக ஆந்திராவில் பல ஜப்பான் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.இன்று ஜப்பான் நாட்டுபிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.
