

2030ம் ஆண்டில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 50 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஜார்ஜ் இன்ஸ்டிட்யூட் ஃபார் குளோபல் ஹெல்த்' எனும் அமைப்பு ‘தி லான்செட்' எனும் பிரபல மருத்துவ ஆய்வு இதழில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சை குறித்த அந்த ஆய்வுக் கட்டுரையில், 2010ம் ஆண்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 26 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 54 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு டயாலிஸிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை மூலம் நிவாரணம் அளிக்க முடியும் என்றாலும், இவை இரண்டும் செலவு அதிகமுள்ள சிகிச்சை முறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.