Last Updated : 19 Mar, 2015 12:13 PM

 

Published : 19 Mar 2015 12:13 PM
Last Updated : 19 Mar 2015 12:13 PM

பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாக். நிறுத்தவேண்டும்: ராஜ்நாத்

பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் நிறுத்தினால் தெற்காசியாவின் பாதுகாப்பு மேம்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு கருத்தரங்கம்- 2015, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய ராஜ்நாத் சிங், "பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் நிறுத்தினால் தெற்காசியாவின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவு மேம்படும். பயங்கரவாதிகள் நல்லவர், கெட்டவர் இல்லை. எனவே, பயங்கரவாதிகளை தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்திய மண்ணில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்திய முஸ்லிம்களுக்கு பாராட்டு:

"உலகம் டிஜிட்டல்மயமாகிவிட்ட நிலையில் பயங்கரவாத கொள்கைகளை விஷமிகள் ஆன்லைனில் பரப்புவதும் எளிதாகிவிட்டது. உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு 'லோன் உல்ஃப்' 'டூ இட் யுவர்செல்ஃப்' போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெறுப்புப் பிரச்சாரத்தை எளிதாக பரப்புகின்றனர். இதனால், அப்பாவி மக்கள் சிலர் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் உலகம் முழுவதும் இவ்வாறாக பலரை மூளைச் சலவை செய்துள்ளது.

ஆனால், இந்தியாவில் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. ஏனெனில் இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள். அவர்களை அடிப்படைவாதிகளின் கொள்கைகள் அசைக்க முடியாது" என ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x