

நாளந்தா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பிரணாப் பிரகாஷ், ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தபோது, அவரை அப்பகுதியைச் சேர்ந்தோர் தாக்கினர்.
பிஹார் ஷெரீப் அருகே உதார்பு கிராமத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பிரணாப் பிரகாஷ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரை 25 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. பின்னர், அவரை இழுத்துச் சென்று கட்டையால் தாக்கினர். தலையில் காயமடைந்த பிரணாப் பிரகாஷ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.
பிரகாஷ் மீதான தாக்குதலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பும், காவல் துறை கண்காணிப்பாளர் வீட்டின் முன்பும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய ஜனதா தளத் தொண்டர்கள்தான் காரணம் என்று அவர்கள் கூறினர்.
இத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கவுஸலேந்திர குமார், காங்கிரஸ் சார்பில் மாநில முன்னாள் காவல் துறை தலைவர் ஆஷிஸ் ரஞ்சன் சின்ஹா, லோக் ஜன சக்தி சார்பில் சத்யேந்திர சர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.