

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், ஜீலம் நதியில் வெள்ளம் அபாயகட்டத்தைத் தாண்டிப் பாய்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியும், ஜம்முவில் சில பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. நான்கு வீடுகள் இடிந்து விழுந்ததில் 16 பேர் பலியா யினர்.
கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காஷ்மீரில் பெரும் சேதம் ஏற்பட்டது. நூற்றாண்டு காணாத வெள்ளத்தால் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். பல கோடி மதிப்பிலான பயிர்கள் நாசமாகின. மக்கள் அத்துயரத்தில் இருந்து மீள்வதற்குள் தற்போது மீண்டும் ஜீலம் நதி அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக தெற்கு காஷ்மீர் பகுதியில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.
நதியில் நேற்று காலை நிலவரப்படி அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில் 22.4 அடி உயரத்துக்கும், முன்ஷி பாக் பகுதியில் 19 அடி உயரத்துக்கும் வெள்ளம் பாய்கிறது.
வெளியேறும் மக்கள்
அனைத்து ஊழியர்களையும் உடனடி யாக பணிக்கு வருமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜீலம் நதியோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளனர். ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் கையில் கிடைத்த உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.
ராஜ்பாக், ஜவாஹர் நகர், கோக்ஜிபாக், வாஸிர்பாக் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக உள்ளது. இங்குள்ள மக்கள் கடந்த இரு நாட்களாகவே வெளியேறி வருகின்றனர்.
போக்குவரத்து துண்டிப்பு
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மூடப்பட்டது. ஸ்ரீநகரிலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அனைத்து விதமான தேர்வுகளும் வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 8 குழுவினர் விரைந்துள்ளனர்.
16 பேர் பலி
லால்டன் பகுதியில் வெள்ளம் காரண மாக நான்கு வீடுகள் இடிந்து விழுந்த தில் 16 பேர் இடிபாடுகளில் புதையுண் டனர். இதில், 3 பேரின் மரணம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களும் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி உதம்பூர் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார்.
ராணுவ உதவி
மாநில அரசின் வெள்ள நிவாரண நிதியாக காஷ்மீருக்கு ரூ. 22 கோடியும், ஜம்முவுக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கி முதல்வர் முப்தி முகமது சயீது அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனை வருக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ராணுவத்தை அனுப்பி மீட்பு மற்றும் இதர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை முதல்வர் முப்தி முகமது சயீது கேட்டுக் கொண்டுள்ளார்.