Published : 17 Mar 2015 09:10 AM
Last Updated : 17 Mar 2015 09:10 AM

தமிழகத்தின் 4 சமுதாய வானொலிகளுக்கு தேசிய வானொலி விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த நான்கு சமுதாய வானொலிகளுக்கு தேசிய சமுதாய வானொலி விருதுகள் வழங்கப்பட்டன.

ஐந்தாவது தேசிய சமுதாய வானொலி விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கருப்பொருள், சமுதாயப் பங்கேற்பு, உள்ளூர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல், ஆக்கபூர்வமான புதுமையான நிகழ்ச்சி என நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சமுதாய பங்கேற்பிற்கான பிரிவில் வழங்கப்பட்ட இரண்டு விருதுகளையும் தமிழகத்தைச் சேர்ந்த சமுதாய வானொலிகள் தட்டிச் சென்றன.

இந்த பிரிவுக்கான முதல் பரிசு அண்ணா சமுதாய வானொலியின் மகளிர் நேரம் என்ற நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு “உழுதுண்டு வாழ்வோம்” என்ற நிகழ்ச்சிக்காக மதுரையின் வயலக வானொலி பெற்றது.

மதுரையைச் சேர்ந்த ஷாமலவாணி வானொலியின் “வாக்கப்பட்ட பூமி” என்ற நிகழ்ச்சி கருப்பொருளுக்கான விருது பிரிவில் மூன்றாவது பரிசினை வென்றது. இந்த பிரிவில் முதல் பரிசினை ஒடிஸாவைச் சேர்ந்த வானொலியும், இரண்டாம் பரிசினை கேரளாவை சேர்ந்த வானொலியும் பெற்றன.

ஆக்கபூர்வமான புதுமையான நிகழ்ச்சி பிரிவில், கோயம்புத்தூரில் இயங்கி வரும் ரதி வாணி என்ற சமுதாய வானொலியின் ‘போதுமடா சாமி’ என்ற நிகழ்ச்சி விருதினைப் பெற்றது.

உள்ளூர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் பிரிவில் முதல் பரிசை உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வானொலியும் இரண்டாம் பரிசினை குஜராத்தின் வானொலியும் பெற்றன.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியபோது, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் பல முயற்சிகளால் சமுதாய வானொலி கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை நாட்டில் 409 சமுதாய வானொலிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 179 வானொலி நிலையங்கள் ஒலிபரப்பை தொடங்கிவிட்டன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x