Last Updated : 06 Mar, 2015 10:02 AM

 

Published : 06 Mar 2015 10:02 AM
Last Updated : 06 Mar 2015 10:02 AM

ஆக்ரா குரங்குகள் மறுவாழ்வுக்கு ரூ.58 லட்சம் ஒதுக்கீடு

ஆக்ரா நகரில் நோயுற்ற மற்றும் மூர்க்கத்தனமான குரங்குகளின் மறுவாழ்வுக்காக உத்தரப்பிரதேச அரசு ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் திரளாக வரும் ஆக்ராவில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது. இது தொடர்பாக மாநில அரசு மீது அடிக்கடி புகார்கள் எழுவதுண்டு. இந்நிலையில் இப்புகார்களை சமாளிக்கும் வகையில் ஆக்ராவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள ஃபரா எனும் வனப்பகுதியில் குரங்குகளுக்காக மறுவாழ்வு மையம் உருவாக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்ரா மண்டல நிர்வாக ஆணையர் பிரதீப் பட்னாகர் கூறும்போது, “ஆக்ராவில் நோயுற்ற மற்றும் மூர்க்கத்தனமான குரங்குகள் இந்த மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்காக ஒரு தனியார் வனப்பாதுகாப்பு மையம் மற்றும் மாநில வனப்பாதுகாப்புத் துறையுடன் ரூ. 58 லட்சத்தில் ஓராண்டுக்கு ஒப்பந்தம் போடவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஆக்ரா வில் சுமார் 9,000 குரங்குகள் இருந்தன. இவை தற்போது 26,000 ஆக உயர்ந்துவிட்டன. இவற்றில் நோயுற்ற மற்றும் மூர்க்கத்தனமான குரங்குகளால் மக்களுக்கு அதிக தொல்லை இருந்து வருகிறது. இந்நிலையில் இவை சிகிச்சைக்காக மறுவாழ்வு மையம் கொண்டுசெல்லப்பட இருப்பதால், ஆக்ராவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இவற்றின் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருகிலுள்ள ஆன்மீக நகரமான மதுராவில், ஆக்ராவை விட 3 மடங்கு குரங்குகள் உள்ளன. எனவே, அவற்றுக்காகவும் ஃபரா வனத்தில் மறுவாழ்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x