

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளுக்கு அரசு சேவைகளை அளிக்கும் பொது சேவை மையங்களை 2.5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு விரிவுபடுத்த உள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நாடு முழுவதும் பொது சேவை மையங்களை நிர்வகிக்கும் பெண் தொழில்முனைவோர் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்று பேசும்போது, “நாட்டின் முன்னேற்றத்துக்கு பொது சேவை மையங்கள் மிகவும் அவசியம். இந்த மையங்கள் மூலம் பெண்கள் அதிகாரம் பெறச்செய்ய முடியும். எனவே பொது சேவை மையங்களை 1.5 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்த உள்ளோம்” என்றார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டுக்குள் ரூ.4,750 கோடி செலவில் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில் பொது சேவை மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஆர்.எஸ். சர்மா கூறும்போது, பொது சேவை மையங்களை விரிவுபடுத்தும் திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
சில மாநிலங்களில் பொது சேவை மையங்கள் ரூ.1 மாத வாடகை அடிப்படையில் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த மையங்களை அதிக மக்கள் தொடர்புகொண்டு பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் தொழில்முனைவோர் பலர், இந்த மாநாட்டில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தனுஜா கூறும்போது, “ஆதார் அட்டை போன்ற அரசு சேவைகளை பெற பொதுமக்கள் எனது மையத்துக்கு வருகின்றனர்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வந்த பெண் தொழில் முனைவோர் கூறும்போது, “பான் கார்டு, பாஸ்போர்ட், மொபைல் ரீசார்ஜ், ரயில் டிக்கெட் போன்ற சேவைகளுக்கு அதிக மக்கள் வருகின்றனர்” என்றார்.