

நிழல் உலகின் முக்கிய நபர் ஒருவர் டெல்லி போலீஸாரிடம் சிக்கியுள்ளார். சர்வதேச தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமின் முன்னாள் சகாவான ஏஜாஜ் லக்டேவாலாவிடம் பணியாற்றி வந்த இவர் தங்கள் கும்பலுக்கு டெல்லியில் ஆள் சேர்த்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
மியான் என்கிற முகம்மது யூசூப் (30) என்ற இந்த நபரை கடந்த 2 மாதங் களாக டெல்லி போலீஸார் தேடிவந் தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் வடக்கு டெல்லி முகர்பா சவுக் பகுதியில் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை டெல்லி போலீஸாரின் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், மேற்கு உ.பி.யின் பரேலியை சேர்ந்த மியான், நிழல் உலக தாதாக்களில் ஒருவரான ஏஜாஜ் லக்டேவாலாவுக்காக வட இந்தியாவில் பணியாற்றி வந்தவர். இவருக்கு ஏஜாஜ் உ.பி., டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தனது செயல்பாடுகளுக்கான பொறுப்பை அளித்திருந்தார். குறி தவறாமல் சுடும் திறமைகொண்ட மியானின் இலக்கில், டெல்லி மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த பிரபல தனியார் பெருநிறுவன அதிபர்கள் இருவர் இருந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிபர் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து `தி இந்து’விடம் டெல்லி காவல்துறை இணை ஆணையர் ரவீந்திரா யாதவ் கூறும்போது, “போதைப் பொருள் வியாபாரியான மியான், நிழல் உலக தாதா ஏஜாஜ் லக்டேவாலாவிடம் அவரது மும்பை சகாக்கள் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளார். மியானிடம் இரு பெருநிறுவன அதிபர்களை கொல்லும் பொறுப்பை ஏஜாஜ் அளித்தி ருந்தார். வட அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா என பல்வேறு நாடு களில் இடம்பெயர்ந்தபடி தலைமறை வாக இருக்கும் ஏஜாஜுடன், இணைய தளம் மூலமாக பேசும் சாட்டிலைட் போன்கள் வழியாக மியான் தொடர்பில் இருந்துள்ளார்” என்றார்.
மியான் கைது மூலம், டெல்லியை மையமாக வைத்து வட இந்திய மாநிலங்களுக்காக உருவாகவிருந்த நிழல் உலக தாதாக்களின் புதிய கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏஜாஜின் கும்பலில் மேலும் சில இளைஞர்களை சேர்க்கும் பணியில் மியான் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, பஞ்சாபின் பிரபல கிரிமினல் சோனு என்கிற ராஜேந்தர் என்பவரிடம் பேச்சு நடத்தி வந்துள்ளார். ராஜேந்தர் மீது பல்வேறு குற்ற வழக்கு கள் உள்ளன. இவரிடம் குறிதவறா மல் சுடும் 7 இளைஞர் கும்பல் பணி யாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது ராஜேந்தர், போதைப் பொருள் வழக்கில் பஞ்சாபின் கபூர்தாலா சிறையில் உள்ளார்.
இந்த பஞ்சாப் கும்பலின் திறமையை சோதிக்கும் வகையில் அவர்களுக்கு மும்பையில் தொழிலதிபர் ஒருவரை கொல்லும் பணியை மியான் கடந்த சில மாதங்களுக்கு முன் கொடுத்துள்ளார். இதில் அந்தக் கொலை முயற்சி தோல்வி அடைந்தாலும், அந்தக் கும்பல் இயங்கிய விதத்தில் மியான் திருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
எனவே, ஒருவேளை மியான் கைது செய்யப்படாவிட்டால் அந்தக் கும்பல் பல்வேறு முக்கியப் பிரமுகர்களை கொன்றிருக்கும் என டெல்லி போலீஸார் நம்புகின்றனர்.
உயர் அதிகாரிகள் படை
மியான் மிகவும் முக்கிய குற்றவாளி யாகக் கருதப்படுவதால் அவரைப் பற்றிய தகவலை டெல்லி போலீஸார் உடனே வெளியிடவில்லை. இவரை கைது செய்யும் முயற்சியில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் படை ஈடுபட்டிருந்தது. கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்ட மியான், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த கைதின் மூலம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் நிழல் உலக தாதாக்கள் தங்கள் கும்பலை டெல்லியில் பணியமர்த்த எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
யார் இந்த ஏஜாஜ்?
மும்பை பாலிவுட் பட உலகின் முதல் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமிடம் தனது 20 வயது முதல் நெருக்கமாகப் பணியாற்றியவர் ஏஜாஜ் லக்டேவாலா. மும்பையில் 1993-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பின், தாவூத் மற்றும் அவரது சகோதரர் அணிஸ் இப்ராஹிமுடன் ஏஜாஜ் குவைத் நாட்டுக்கு சென்றுவிட்டார்.
தொடர்ந்து தாவூதின் நடவடிக்கை கள் பிடிக்காமல் அவரிடம் இருந்து 2000 ஆண்டில் பிரிந்து மற்றொரு நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனுடன் சேர்ந்தார். பிறகு ராஜனிடம் இருந்தும் பிரிந்து தனியாக செயல்டும் ஏஜாஜ், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மும்பை தொழில் அதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிப்பதை தொழிலாக செய்துவருகிறார்.
இவரை கொல்லும் முயற்சியில் தாவூத் கும்பல் ஈடுபட்டுள்ள நிலையில், பாங்காக்கில் இக்கும்பலிடம் சிக்கி நூலிழையில் தப்பினார் ஏஜாஜ். தற்போது வட அமெரிக்காவில் சர்வதேச கிரிமினல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ஏஜாஜை, இன்டெர்போல் அதிகாரிகளும் பல ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.
திரைப்படமான தாதாவின் கதை
நிழல் உலக தாதாக்கள் பற்றிய உண்மை தகவல்களை வைத்து பாலிவுட்டில் திரைப்படங்கள் தயாரிப் பது வழக்கம். அந்த வரிசையில் நல்ல வசூலை கொடுத்த `கம்பெனி’ எனும் திரைப்படத்தில் தாவூத் மற்றும் ஏஜாஜின் நட்பும் பிரிவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதில், அஜய்தேவ்கன் மற்றும் விவேக் ஓபராய் நடித்திருந்தனர்.