

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளியை அடுத்து, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார்.
இருப்பினும், மக்களவையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அவையில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், மாநிலங்களவையிலும் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.