

மக்களவைத் தேர்தலில் பா.ஜ கூட்டணி 300 தொகுதிகளை கைப்பற்றும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
சீமாந்திரா மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலதிபர்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஹைதராபாத்தில் வியாழக்கிழமை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் அவர்கள், ‘நம் மாநிலம், நம்முடைய எதிர்காலம்' எனும் பெயரில் பேருந்துப் பிரச்சார யாத்திரை மேற்கொண்டனர்.
இந்த யாத்திரையை நாயுடு தொடங்கி வைத்து பேசியதாவது:
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி காலத்தில், தொழில் வளம் பெருகியது. மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. பொருளாதாரம் சீர்குலைந்தது. அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டோம். ஊழல் பெருகிவிட்டது. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து, சீமாந்திரா பகுதியினருக்கு தலைநகரம் கூட அறிவிக்காமல் சுய நலமாக காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. சீமாந்திராவில் எப்போதும் இல்லாத வகையில், வளர்ச்சிப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
இது தெலுங்கு தேசம் கட்சியினால் மட்டுமே சாத்தியம். இதற்காகத்தான் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ கூட்டணி 300 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.