Published : 05 Apr 2014 10:41 AM
Last Updated : 05 Apr 2014 10:41 AM

20 மேடைகளில் ஒரே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தில் பிரச்சாரம்: மோடி வழியில் சந்திரபாபு நாயுடு திட்டம்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைப் போல 3டி ஹோலோ கிராபிக் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே நேரத்தில் 20 பொதுக் கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆந்திராவில் வரும் 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சீமாந்திரா, தெலங்கானா ஆகிய இரு பகுதிகளிலும் ஆட்சியைப் பிடிக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். செல்போன் மூலம் அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு வேட்பாளர்களை தேர்வு செய்யவுள்ளதாக ஏற்கெனவே நாயுடு அறிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக மேலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கையாள முடிவு செய்துள்ளார். அதாவது, 3டி ஹோலோ கிராபிக் மூலம் ஒரு 'செட்' அமைத்து அதில் நாயுடு முன்கூட்டியே பொதுக் கூட்டத்தில் பேசுவது போன்று பேசி பதிவு செய்யப்படும்.

இதனை ஓரிடத்திலிருந்து ஒளிபரப்பினால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 பொது இடங்களில் நாயுடு நேரடியாக மக்கள் முன் தோன்றி பேசுவது போன்ற பிரமையை ஏற்படுத்த முடியும்.

பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களில் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் பேசி முடித்ததும், மின் விளக்குகள் அணைக்கப்படும். பின்னர் ஒரு கன்டெய்னர் மூலம் 3டி தொழில்நுட்பப் பதிவு வெளிப்படுத்தப்படும். இதில் சந்திரபாபு நாயுடு நேரடியாக தோன்றி பேசுவார்.

ஹை-டெக் முதல்வர் எனப் பெயர்பெற்ற சந்திரபாபு நாயுடு, தகவல் தொழில் நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவரது ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் நகரில் பல தொழில்நுட்பப் பூங்காக் களை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3டி கண்ணாடி இன்றி பார்க்கலாம்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தொழில்நுட்பம் மூலம் 800 இடங்களில் பேசி கின்னஸ் சாதனை புரிந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள Nchant 3டி தொழில்நுட்ப நிறுவனம் இதற்கான ஒட்டுமொத்த உரிமையை இந்தியாவில் பெற்றுள்ளது. இந்நிறுவனம்தான் மோடிக்கு பிரச்சார உத்திகளைக் கையாண்டது.

இதன்மூலம், நகர்ப்புறங்களுக்கு மட்டுமல்லாது குக்கிராமங்களிலும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 இடங்களில் பிரச்சாரம் செய்யலாம்.

இந்த தொழில்நுட்பம் மூலம் முன்பே பதிவு செய்யப்பட்ட நாயுடுவின் பேச்சை ஒலி-ஒளி யுடன் 3டி ப்ரொஜெக்டர் மூலம் 45 டிகிரி அளவில் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடை மீது ஒளி பரப்பப்படும். அப்போது முப்பரிமாண முறையில் சந்திரபாபு நாயுடு மேடை மீது தோன்றுவார். இதனை 3டி கண்ணாடி இன்றி பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x