

மர்மமான முறையில் இறந்த சுனந்தா புஷ்கரின் செல்போன் மற்றும் கணினியில் பதிவாகியிருந்த தகவல்களை தடயவியல் நிபுணர்கள் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூரின் (59) மனைவியான சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுனந்தாவின் உடல்கூறு ஆய்வறிக்கையின்படி விஷம் காரணமாக அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்துள்ள போதிலும், யாருடைய பெயரையும் சேர்க்கவில்லை.
எனினும், இந்த வழக்கு தொடர்பாக சசி தரூரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளித்து வரும் தரூர், அரசியல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு நியாயமாகவும் சுதந்திரமாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சுனந்தாவின் மரணத்துக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக டெல்லி காவல் துறை ஆணையர் பிஎஸ் பஸ்ஸி தெரிவித்திருந்தார்.
இதன்படி, சுனந்தாவின் செல்போன், கணினி ஆகியவற்றில் பதிவாகி இருந்த தகவல்களை குஜராத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்ததையடுத்து அதுதொடர்பான தகவல்களை டெல்லி போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.