

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் தனது எழுத்துப் பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் நிறைவடைந்ததால், மூன்றாம் தரப்பான சுப்பிரமணியன் சுவாமியின் வாதத்தை 9-ம் தேதி தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கள்கிழமை (நேற்று) இறுதி வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்போவதாக தெரி வித்தார். ஆனால் நேற்று அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
சுவாமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவன் சந்திர ஷெட்டி, “பல்வேறு முக்கிய ஆவணங்களை இணைக்க வேண்டியிருப்பதால் எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தயாரிக்க சுப்பிரமணியன் சுவாமிக்கு ஒரு வார கால கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று கோரிக்கைவிடுத்தார். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி குமார சாமி, “இவ்வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் குறுகிய கால அவகாசமே அளித்துள்ளது. எனவே ஒரு வார கால அவகாசம் அளிக்க முடியாது. மேலும் உங்களது கருத்தை அரசு வழக்கறிஞர் பவானி சிங் மூலமாகவே நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். வரும் புதன்கிழமைக்குள் சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தில் தனது எழுத்துபூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
நீதிபதியின் தொடர் கேள்விகள்
இதையடுத்து நீதிபதி, “எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தொடுத்தீர்கள்? நால்வர் மீதும் சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் குற்றப்பத்திரிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? குற்றப் பத்திரிக்கையை யார் தாக்கல் செய்தார்? அதை எந்த அதிகாரி மேற்பார்வையிட்டு ஒப்புக் கொண்டார்? இவ்வழக்கில் அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் தேவையான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஏன்?” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங், “விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையை அப்போதைய அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். குற்றவாளிகள் மீதான ரூ.66.65 கோடி சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழங்கிய ஆவணங்களையும், சாட்சியங்களையும் ஆதாரப் பூர்வமாக விசாரணை நீதிமன்றத் தில் நிரூபித்துள்ளோம்” என்றார்.
அதற்கு நீதிபதி, “விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவை நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள். அதேபோல ஜெயலலிதாவின் வீடுகளை மதிப்பீடு செய்த பொறியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி இருந்தேனே?” என்றார். அதற்கு பவானி சிங், “நல்லம்ம நாயுடுவுக்கு வயதாகிவிட்டது. பொறியாளர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதில் நிறைய நடைமுறை சிரமம் உள்ளது” என்றார்.
ஜெ.தரப்பு இறுதி வாதம் தாக்கல்
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரிடம், “இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக் களை விடுவிக்கக் கோரி நீங்கள் மனு தாக்கல் செய்தீர்களா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பி.குமார் உட்பட ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் அனைவரும் மவுனமாக இருந்தனர். மேலும் பதில் சொல்லாமல் ஆவணங்களை தேடியதால், நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சமுத்து அது தொடர்பான பழைய கோப்புகளை நீதிபதியிடம் அளித்தார்.
அதில் சொத்துக்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தொடக்கத் திலேயே நிராகரித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.