

பிரிவினைவாத தலைவர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விளக்க அறிக்கையை ஜம்மு காஷ்மீர் அரசு, உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கிறது.
இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் அரசு சார்பில் ஐ.ஏ.என்.எஸ். ஏஜென்சியிடம் கூறும்போது, "மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசு அளித்த விளக்கத்தை உள்துறை அமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டது. அதனால் மஸ்ரத் விடுதலை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று (புதன்கிழமை) உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும்.
ஆலம் விடுதலையில், கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாக நாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தோம். ஆனால் அது குறித்த விளக்கத்தையும் உள்துறை அமைச்சகம் எங்களிடம் கேட்டுள்ளது" தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, அம்மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி (மஜக) தலைமையிலான அரசு சட்டபூர்வமான விளக்கத்தை செவ்வாய்க்கிழமை அளித்தது.
ஆனால் அவை ஏற்கக் கூடியதாக இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்த நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, அவர்களோடு காஷ்மீரில் கூட்டணி அமைத்திருக்கும் மஜக-வுக்மான கருத்து வேறுபாடு தீராமல் உள்ளது.