Last Updated : 02 Mar, 2015 06:04 PM

 

Published : 02 Mar 2015 06:04 PM
Last Updated : 02 Mar 2015 06:04 PM

ஆம் ஆத்மி தலைமைப் பதவி: கேஜ்ரிவாலை நீக்க முயற்சி’

ஆம் ஆத்மியில் தேசியத் தலைவர் பதவியிலிருந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்க முயற்சி நடந்து வருவதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியில் உள்கட்சிப் பூசல் வலுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சஞ்சய் சிங், அஷுதோஷ் ஆகியோர் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சஞ்சய் சிங் கூறும்போது, "அர்விந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர். மூத்த உறுப்பினர்களே அவர் மீது குறிவைத்தால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மையே. ஆனால், இந்தப் பிரச்சினை அனைத்தும் கட்சியின் உள்விவகாரம். இதனை நாங்கள் தீர்ப்போம்.

கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து கேஜ்ரிவாலை நீக்குவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது.

கருத்து வேறுபாடு இருந்தால் அதுகுறித்து கட்சிக்குள் விவாதித்து சுமுகத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்த விஷயத்தை பொது இடங்களில் விவாதிக்கக் கூடாது.

கட்சியின் மூத்த தலைவர்கள், கேஜ்ரிவாலுக்கு எதிராக செயல்பட்டாலோ, கட்சியின் புகழைக் கெடுக்க முயற்சித்தாலோ கட்சிப் பணிகள் சுமுகமாக நடைபெறாது. கட்சியின் நற்பெயரை சிதைக்கும் சில வேலைகள் நடக்கின்றன. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

சிக்கலின் பின்னணி

"ஆம் ஆத்மி கட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒரு தனி நபரிடமே உள்ளன. ஒரு நபர் மையப்படுத்திய அதிகாரம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேண்டுமானால் எடுபடலாம். ஆனால் காலப்போக்கில் அது நன்மை பயக்காது. ஒரு நபர் ஆளுமையில் இருந்து விடுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரசாந்த் பூஷன் அண்மையில் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், இதே பிரச்சினை தொடர்பாக 7 மாதங்களுக்கு முன்னதாக யோகேந்திர யாதவ் கருத்து கூறியிருப்பதாகவும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

பிரசாந்த் பூஷனின் இக்கடிதமே, ஆம் ஆத்மி கட்சிக்குள் பூசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகக் காரணம் என கூறப்படுகிறது.

ஆனால், இந்தப் பிரச்சினை கட்சியின் ஒற்றுமையை சிதைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி என்றும், இதனை கட்சியின் பொதுக் குழு கூட்டமே ஒன்று கூடி தீர்க்கும் என்றும் ஆம் ஆத்மியின் மூத்தத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அர்விந்த் கேஜ்ரிவாலை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கும் முயற்சிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியே ஒப்புக்கொண்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்குள் பூசல் ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள அனைத்து தகவல்களும் கற்பனைக் கதைகளே என அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் முதலில் விளக்கம் வெளியிட்டதும் கவனிக்கத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x