பிரவீண் தொகாடியா உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை

பிரவீண் தொகாடியா உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை
Updated on
1 min read

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வருகிற 9-ம் தேதி உடுப்பி அருகேயுள்ள குஞ்சினபெட்டுவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக 'வீரமிகு இந்து மாநாடு', பேரணி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் பிரவீண் தொகாடியா உட்பட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள், மடாதிபதிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை நிருபர்களிடம் நேற்று கூறிய‌தாவது:

கடலோர கர்நாடகத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படும் பதற்றமான‌ சூழல் காணப்படுகிறது. இந்த சூழலில் பிரவீண் தொகாடியா உடுப்பி நிகழ்ச்சியில் பங்கேற்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே மார்ச் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை உடுப்பி மாவட்டத்துக்குள் அவர் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அனுமதியின்றி நுழைந்தாலோ,கூட்டத்தில் கலந்து கொண்டாலோ அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரவீண் தொகாடியாவின் பேச்சை ஒளிபரப்பவும் கருத்துகளை சிடி வாயிலாக விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைப்புகள் கண்டனம்

உடுப்பி மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், ராம் சேனா,சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக இளைஞர் அணி அறிவித்துள்ளது.

க‌ர்நாடக மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் கேசவ் ஹெக்டே கூறியபோது, இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இல்லாவிடில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்''என்றார்.

தொடரும் தடை

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூருவில் நடந்த மாநாட்டில் தொகாடியா பங்கேற்பதை தடுக்க நகருக்குள் நுழைய ஒரு வாரத்துக்கு தடை விதிக்க‌ப்பட்டது. இதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியபோது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இருப்பினும் அத்துமீறி பிரவீண் தொகாடியா பெங்களூருவுக்குள் நுழைந்தார். இதனால் பெங்களூரு போலீஸார் அவரை விமான நிலையத்தில் இருந்து தமிழக எல்லையான ஓசூரில் கொண்டு சென்று விட்டனர். அவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மாநாட்டில் அவரது பேச்சு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒளிபரப்பப்பட்டதால் தொகாடியா உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெங்களூருவை தொடர்ந்து உடுப்பி மாவட்டத்திலும் பிரவீண் தொகாடியா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் உள்ள இந்துத்துவா தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பதற்றத்துக்குரிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in