

பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணம் தொடர்பான விசாரணை நிலவரம் குறித்து மாநில ஆளுநர் வஜுபாய் வல்லிடம் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா விளக்கம் அளித்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மரணத்தில் மர்மம் இருக்கிறது எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாநில எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து கோரிக்கை வருகிறது.
இந்நிலையில், டி.கே.ரவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நிலவரம் குறித்து மாநில ஆளுநர் வஜுபாய் வல்லிடம் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா விளக்கம் அளித்தார்.
ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்துவிட்டு திரும்பியபோது வெளியே இருந்த செய்தியாளர்களிடம் சித்தராமைய்யா, "ரவி வழக்கு விசாரணையில் இன்றைய நிலவரம் வரை ஆளுநரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். மேலும், விசாரணை சிஐடி வசம் இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தேன். அனைத்து விளக்கத்தையும் ஆளுநர் கேட்டறிந்தார்" என்றார்.
ரவி பெயருக்கு களங்கம் விளைவிப்பதா?
ரவி மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க காங்கிரஸ் கட்சி முயல்வதாக குற்றம் சாட்டிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, ரவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அவருடன் படித்த பெண் அதிகாரி ஒருவரின் பெயரையும் இந்த வழக்கில் இழுத்து ரவியின் வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறது என கூறியுள்ளார்.