

கேரளத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களை தவிர, இப்போராட்டம் பெரும்பாலும் அமைதியாக முடிந்தது.
கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதையொட்டி கேரளத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடியிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதியுற் றனர். பல இடங்களில் நோயாளிகள், மருத்துமனைக்குச் செல்ல போலீஸார் உதவினர்.
திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் நேற்று காலை கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கல்வீச்சு சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
கோழிக்கோடு மாவட்டத்தில் தமிழக பதிவு எண் கொண்ட சரக்கு லாரி ஒன்றும் மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ் ஒன்றும் கல்வீசித் தாக்கப்பட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று இடதுசாரி கட்சிகள் முழு அடைப்பு நடத்தின. இந்நிலையில் சட்டப்பேரவை வன்முறையை கண்டித்து மாநிலத்தில் இன்று கருப்பு தினமாக காங்கிரஸ் அனுசரிக்கிறது.