

சீன அரசின் ஒத்துழைப்புடன் அதிவேக ரயில் (புல்லட் ரயில்) பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு டெல்லி-சென்னை வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
வைர நாற்கர திட்டத்தின் கீழ் டெல்லி-மும்பை, மும்பை-சென்னை, சென்னை-கொல்கத்தா, கொல்கத்தா-டெல்லி ஆகிய வழித்தடங்களில் 10,000 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதுபோல, புல்லட் ரயில் பாதை அமைப்பதற்காக சீன அரசின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள சாத்தியக்கூறு ஆய்வுக்கு டெல்லி-சென்னை வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புல்லட் ரயில்களை இயக்க முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ள வழித்தடம் மும்பை-ஆமதாபாத் ஆகும். இதற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி நிதி உதவி வழங்கும். மேலும் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் மேற்கொண்ட இந்த அமைப்பு, முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால அறிக்கையை கடந்த ஆண்டு முறையே, ஜூலை, நவம்பர் மாதங்களில் சமர்ப்பித்தது.
இதுபோல வணிக வளர்ச்சி ஆய்வை மேற்கொண்ட பிரான்ஸ் ரயில்வே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது. இதர வழித்தடங்களில் சாத்தியக்கூறு ஆய்வுக்கு முந்தைய ஆய்வு நடைபெற்று வருகிறது.
மற்ற பகுதிகளின் இணைப்புகள்
டெல்லி-ஆக்ரா-வாரணாசி-பாட்னா (991 கிமீ), ஹவுரா-ஹல்தியா (135 கிமீ), ஐதராபாத்-டோர்னக்கல்-விஜயவாடா-சென்னை (664 கிமீ), சென்னை-பெங்களூர்-கோயம்புத்தூர்-எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (850 கிமீ), டெல்லி-சண்டீகர்-அமிர்தசரஸ் (450 கிமீ), டெல்லி-ஜெய்ப்பூர்-அஜ்மீர்-ஜோத்பூர் (591 கிமீ) ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் சில வற்றுக்கு முதல்கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளன. சிலவற்றுக்கு முடியும் நிலையில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.