

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர விலங்குப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தப் புதிய சட்டத்தின் கீழ் 3 பேரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நாசிக்கில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆசாத் நகர் எனும் பகுதியில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸார், 150 கிலோ மாட்டிறைச்சியை கைப்பற்றினர். ஆனால் அவற்றின் உரிமையாளர்களான ரஷீத் எனும் பாண்டியா, ஹமீது எனும் லெண்டி மற்றும் ஆசிப் தலாத்தி ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் இந்தச் சட்டத்துக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் மாநில நிதித்துறை அமைச்சர் சுதிர் முங்கன் திவார் நேற்று சட்டமன்றத்தில் கூறும்போது, "சுதந்திரப் போராட்ட காலத்தில், பசுவதைக்கு எதிராக மகாத்மா காந்தி குரல் கொடுத்தார். காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் காந்தியவாதி சந்திரசேகர் தர்மாதிகாரி ஆகியோர் பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மாநில அரசுக்குக் கடிதம் எழுதினார்கள். எங்களுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. எனவே, அதனைச் செயல்படுத்தியுள்ளோம்" என்றார்.