

டெல்லி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள பிபிசி ஆவணப்படத்தை இந்திய சேனல்களில் ஒளிபரப்ப வேண்டாம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த டிசம்பர் 16, 2012-ல் ஓடும் பேருந்தில் 23 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த படத் தயாரிப்பாளரும் ‘பாப்டா’ விருது பெற்றவருமான லெஸ்லி உட்வின் பிபிசியுடன் இணைந்து ஆவணப்படமாக தயாரித்துள்ளார்.
டெல்லி பாலியல் சம்பவம் தொடர்பாக பிரிட்டன் படத் தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின் எடுத்த 'இந்தியாவின் மகள்' என்ற அந்த ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
இவ்வழக்கின் குற்றவாளி ஒருவர் திஹார் சிறைக்குள்ளிருந்து அளித்த பேட்டி தொடர்பாக, சிறையினர் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள பிபிசி ஆவணப்படத்தை இந்திய சேனல்களில் ஒளிபரப்ப வேண்டாம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சர்ச்சையைக் கிளப்பியுள்ள அந்த ஆவணப்படத்தில் பேசிய முகேஷ் சிங் என்ற குற்றவாளி, "பலாத்காரம் நடைபெறுவதற்கு ஆணை விட பெண்ணுக்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இரவு நேரத்தில் வெளியில் சுற்றித் திரியும் பெண்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர்கள்தான் ஆண்களை கவர்ந்திழுக்கிறார்கள்.
பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் சண்டை போட்டிருக்க கூடாது. அவர்கள் திருப்பி தாக்கியதால்தான், அந்த கும்பல் அவர்களை கொடூரமாக தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்று நடந்தது ஒரு விபத்துதான். பலாத்காரம் நடக்கும் போது அந்தப் பெண் திருப்பி சண்டை போட்டிருக்க கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும். பலாத்காரத்துக்கு அனுமதித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணை கும்பல் பேருந்தில் இருந்து இறக்கி விட்டிருக்கும். ஆண் நண்பரை மட்டும் தாக்கி இருக்கும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.