

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது, 'பிரிவினைவாதிகளின் காட்ஃபாதர்' ஆக திகழ்கிறார் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சிவசேனா கூறியுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சந்தித்து பேசியதையும், மற்றொரு பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தையும் சிவ சேனா கடுமையாக விமர்சித்து தன் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளது.
அதில், "காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அம்மாநில முதல்வர் முப்தி முகமதின் உருவத்தில் ஒரு 'காட்ஃபாதர்' கிடைத்துள்ளார். ஏனென்றால், கிலானியுடனான இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சந்திப்புக்கு இவரே தூண்டுதலாக இருந்தார்.
இந்தச் சந்திப்பில் தற்போதைய காஷ்மீர் நிலவரம் குறித்து விவரமாக பேசி உள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை தற்போது நடக்க பெரிதாக எந்தக் காரணமும் இல்லை. புதிதாக முதல்வராக இருக்கும் முப்திக்கு இதில் நிச்சயம் பங்கு உண்டு.
காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை இந்தியாவின் எந்தப் பகுதி மக்களும் ஏற்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் மனதில் தோன்றும் அனைத்தையும் செய்யலாம்.
ஆனால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்தியாவை ஆளாக்காதீர்கள். நாட்டுக்கு எதிரான குற்றத்தை ஈடுப்படாதீர்கள். பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை விடுதலை செய்துள்ளது தீவிரவாதிகளுக்கு உதவிடும் செயல்.
அதனால், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முப்தியை கைது செய்ய வேண்டும்" என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.