Last Updated : 05 Mar, 2015 11:57 AM

 

Published : 05 Mar 2015 11:57 AM
Last Updated : 05 Mar 2015 11:57 AM

பிரிட்டனில் ஒளிபரப்பட்டது இந்தியாவின் மகள் ஆவணப்படம்: பிபிசி நிறுவனம் தகவல்

மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ள 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் நேற்றிரவு பிரிட்டனில் ஒளிபரப்பபட்டதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா விதித்திருந்த தடையை மீறி இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

டெல்லி பாலியல் பலாத்கார குற்றவாளியின் மொத்தப் பேட்டியுமே தரக்குறைவான வார்த்தைகளால் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. மேலும், பெண்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடுவதுபோல உள்ளது. இந்தப் பேட்டி ஒளிபரப்பானால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். சமூகத்தில் பெண்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும். எனவே, பேட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. பிபிசி நிறுவனமும் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு) பிரிட்டனில் ஒளிபரப்பபட்டதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிபிசி நிறுவனம் அனுப்பியுள்ள தகவலில்,"'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு) பிரிட்டனில் ஒளிபரப்பபட்டது. இருப்பினும், இந்திய அரசின் உத்தரவை ஏற்று இந்தியாவில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படமாட்டாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் திரைப்பட இயக்குநர் லெஸ்லி உட்வின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திகார் சிறைக்குள் உள்ள குற்றவாளியை சந்தித்து பேட்டி எடுக்க அனுமதி கொடுத்தது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, "எதிர்காலத்தில இதுபோல் ஒரு சம்பவம் நடைபெறுவதைத் தடுக்க தற்போதுள்ள விதிமுறைகளை பரிசீலிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம். திஹார் சிறையில் கைதிகளைச் சந்திக்கவும், பேட்டி எடுக்கவும் இப்போதுள்ள சட்ட விதிகளை மறு பரிசீலனை செய்யவும் கூறியுள்ளோம்" என நேற்று ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் வெளியானது:

மத்திய அரசு தடையை மீறியும், இன்று காலை முதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்தியாவில் யூடியூபில் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்ப காலத்தில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான தடையை அமலாக்குவதில் எந்த அளவுக்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை இது கேள்விக்குறியாக்கியுள்ளது.

முன்னதாக நேற்று, முகேஷ் சிங்கின் பேட்டியை மறு உத்தரவு வரும் வரை ஒலி, ஒளிபரப்பு செய்யவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என டெல்லி மாஜிஸ்திரேட் நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x