

போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் தலைநகர் சனாவில் இரவு முழுவதும் குண்டு மழை பொழிவதாகவும், மக்கள் குடிநீர், உணவின்றி தவித்து வருவதாகவும் நாடு திரும்பிய இந்தியர் ஒருவர் வேதனை தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் விசுவாசிகளான ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஏமன் தலைநகர் சனாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து இப்போதைய அதிபர் தலைமறைவாக உள்ளார்.
இதையடுத்து, கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு சவூதி அரேபியா ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. சவூதி போர் விமானங்கள் 5-வது நாளாக தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.
ஏமனில் இரவு பகலாக தொடரும் தாக்குதலால் அங்கு பணிபுரியும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கடுமையான அரசியல் நெருக்கடிக்கும் தாக்குதலுக்கு இடையே அங்கிருக்கும் வாழ்க்கை சூழல் மிகவும் கொடுமையானதாக உள்ளதாக, ஏமனில் இருந்து நாடு திரும்பியுள்ள இந்தியர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஏமனில் தாக்குதல் அதிகம் இருக்கும் தலைநகர் சனா, துறைமுக நகரமான ஏடனிலிருந்து இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இதனிடையே, தனிப்பட்ட முறையில் இந்தியர்கள் பலர் அங்கிருந்து வெளியேறுகின்றனர். பெரும்பாலான விமான நிலையங்கள் அங்கு மூடப்பட்ட நிலையில், சொந்த நாடுகளுக்கு தப்பித்துச் செல்லும் முயற்சிக்கு பயணிகள் அங்கு உதவியின்றி தவித்து வருகின்றனர்.
இதே சூழலிலிருந்து தப்பித்து வந்தவர் கொச்சியை சேர்ந்த ரூபன் ஜேக்கப் சாண்டி. ஏமனிலிருந்து திங்கள்கிழமை நண்பர் ஒருவருடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருக்கும் சூழல் குறித்து அவர் கூறும்போது, "துபாயில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் நான் பணிபுரிந்தேன். அந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததுதான். நாடு திரும்புவதற்கு அவர்களே உதவி செய்தனர்.
சனிக்கிழமை என்னுடன் சேர்ந்த சுமார் 80 பேர் ஏமனிலிருந்து விமானத்தில் ஏறினோம். அங்கிருந்து கத்தார் விமானம் மூலம் தோஹா வந்து பின்னர் இந்தியா அடைந்தோம்.
ஆனால், விமானம் ஏறும் வரை படாத பாடு பட்டுவிட்டோம். ஒரு விமானத்தை பிடித்துவிட நாங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நேரம் தெரியாமல் காத்திருந்தோம். அங்கு உள்ள சூழல் மோசமானதாக உள்ளது. பசிக்கு உணவு இல்லை. தண்ணீர் கூட இல்லை. இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது. இருந்தாலும் சிரமம் தான். உள்ளூர் மக்களுடன் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பலரும் தவித்து வருகின்றனர்.
சனா, மலைப்பாங்கான நிலப்பரப்புடைய பகுதி. சூரியன் மறைவுக்கு பின்னரிலிருந்து அங்கு வெறும் குண்டு மழைதான். அதிகாலை வரை நீடிக்கும்" என்றார் அவர்.
சவுதி அரேபிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு பெரும் இடையூறு நிலவுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து கேரள அமைச்சர் கே.சி.ஜோசப் கூறும்போது, "மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏமன் செல்வதற்காக 2 விமானங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல இடங்களில் விமானங்கள் பறக்க தடை இருப்பதால் சிக்கல் நீடிக்கிறது. காத்திருக்கும் இந்தியர்களை இந்த விமானங்கள் மூலம் அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அங்கிருந்து இந்தியர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் இலவசமாக செய்து தரப்படும். இந்தியாவுக்கு வந்து வீடு சேரும் வரை எந்த செலவையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்காது. ஆனால் தூதரக உதவியில் வந்தால் மட்டுமே பாதுகாப்பாக வந்து சேர முடியும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இத்துடன் மேலும் 2 கப்பல்களும் சென்றுள்ளன. அனைத்து வகையிலும் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.