நாடாளுமன்றத்தில் செயல்படும் நாட்டின் குறைந்த விலை உணவகம்

நாடாளுமன்றத்தில் செயல்படும் நாட்டின் குறைந்த விலை உணவகம்

Published on

நம் நாட்டில் மிகவும் குறைந்த விலை யில் உணவுகள் கிடைக்கும் இடமாக நாடாளுமன்ற உணவகங்கள் உள்ளன.

இங்கு விற்கப்படும் தாலி எனும் மதிய உணவின் (அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு, இருவகை பொரியல் அல்லது கூட்டு மற்றும் சாலட்) விலை ரூ. 29 ஆகும். இது தவிர சிக்கன் பிரியாணி ரூ. 34, சிக்கன் கறி ரூ. 20.50, சிக்கன் மசாலா ரூ. 24.50, பட்டர் சிக்கன் ரூ. 37, கீர் எனப்படும் இனிப்பு வகை ரூ. 5.50, சப்பாத்தி(1) ரூ. 1, சூப் ரூ. 5.50, ஃபுரூட் சாலட் - 5.50, தேநீர் ரூ.1 என்ற விலையில் இங்கு கிடைக்கின்றன.

ஹைதராபாத் பிரியாணி

இங்கு மசாலா இல்லாமல் புலாவ் வகையை போல் கிடைத்து வந்த பிரியாணி தென்னிந்திய உறுப்பினர் களில் பலருக்கு பிடிக்காமல் போனது. இவர்களில் சிலர், உணவகங்களின் உணவுக்குழு புதிய தலைவரான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர் ஜித்தேந்தர் ரெட்டியிடம் குறை கூறினார். இதையடுத்து ரெட்டியின் முயற்சியில் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முதல் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி கிடைத்து வருகிறது.

47 ஆண்டுகளுக்கு முன்

எம்.பி.க்களுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் செயல்படும் 2 உண வகங்கள் 1968-ல் தொடங்கப்பட்டவை ஆகும். இவற்றில் ஒன்று, முக்கியக் கட்டிடத்தில் முதல் மாடியில் அறை எண் 70-ல் செயல்படுகிறது. மற்றொன்று அருகிலுள்ள நூலகக் கட்டிடத்தில் இயங்குகிறது. இதில் முக்கிய கட்டிடத்தில் உள்ள உணவகத் துக்குத்தான் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் திடீர் விஜயம் செய்து சாப்பிட்டுள்ளார்.

இந்த இரு உணவகங்களிலும் எம்.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். எம்.பி.க்களுடன் வரும் விருந்தினர்கள், உதவியாளர் களுக்கும் அனுமதி உண்டு. இதில் சில எம்.பி.க்கள், பத்திரிகையாளர்களை உடன் அழைத்து வந்து, அரசியல் பேசியபடி சாப்பிடுவதுண்டு.

பத்திரிகையாளர்களுக்கு என முக்கிய கட்டிடத்தில் முதல் மாடியில் அறை எண் 71 மற்றும் 73- ல் இரு உணவகங்கள் உள்ளன. இதில் அறை எண் 71 மிகவும் சிறியது.

வயிறு கெட்ட எம்.பி.க்கள்

நாடாளுமன்ற உணவகங்களில் சாப்பிட்டு வயிறுகெட்ட எம்.பி.க்களும் உண்டு. கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராம்கோபால் யாதவ், ஜெயாபச்சன் ஆகிய இருவரும் இங்கு மதிய உணவு சாப்பிட்ட பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுபற்றி அப்போது, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி.தியாகி நாடாளுமன்றத்தில் பேசும்போது, “எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுக்கும் சதியாக, உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவு வழங்கப்படுகிறது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

மூடப்பட்ட சமையலறைகள்

நாடாளுமன்ற உணவகங்களில் உணவு கெட்டுப்போதவற்கு காரணம், இவற்றில் இயங்கிவந்த சமையல் அறைகள் மூடப்பட்டதுதான். இங்கேயே சமைத்து உணவு சூடாக பறிமாறப்பட்டு வந்த நிலையில், இங்குள்ள எரிவாயு சிலிண்டர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது.

இதையடுத்து முந்தைய ஆட்சியில் சபாநாயகராக இருந்த மீராகுமார், இங்குள்ள சமையல் அறைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனால் காலை 6 மணி அளவிலேயே தேவை யான உணவு வகைகள் வெளியில் சமைக்கப்பட்டு உணவகங்களுக்கு வரத் தொடங்கின. இவற்றை மாலை வரை அவ்வப்போது சூடுபடுத்தி தருவதால் சிலநேரங்களில் இவை கெட்டுப்போவதாக கூறப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தின் மதிய உணவுவேளை சுமார் 1 மணி நேரம்தான் என்றாலும் பெரும்பாலான எம்.பி.க்கள் சுகாதாரத்துக்கு பயந்து இங்குள்ள உணவகங்களில் சாப்பிடு வதில்லை. தமிழக எம்.பி.க்கள் மதிய உணவுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று விடுகின்றனர். இதுபோல் கேரள எம்.பி.க்கள் கேரளா பவனுக்கும் ஆந்திர எம்.பி.க்கள் ஆந்திரா பவனுக்கும் செல்கின்றனர்.

இங்கு மத்திய அமைச்சர்கள் சாப் பிடுவதில்லை. அவர்கள் தங்கள் வீடு களில் இருந்து மதிய உணவை வர வழைத்துக் கொள்கின்றனர். அரிதாக சில அமைச்சர்கள் மட்டும் இந்த உணவ கங்களில் இருந்து தங்கள் அறைக்கு உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனர்.

ரூ.29-க்கு மதிய உணவு சாப்பிட்ட பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று எம்.பி.க்கள் சிலருடன் சேர்ந்து நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் முதல் தளத்தில் 70-ம் எண் அறையில் உணவகம் உள்ளது. எம்.பி.க்களுக்கு இங்கு மிகக் குறைந்த விலையில் உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இங்கு நேற்று ‘சர்ப்ரைஸ் விசிட்’ செய்த மோடி, சைவ உணவுக்கு ஆர்டர் செய்தார். தாலி எனும் மதிய உணவை (அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு, இருவகை பொரியல் அல்லது கூட்டு மற்றும் சாலட்) சாப்பிட்டார். பிறகு உணவுக்கான தொகையாக ரூ.29 செலுத்திய பிரதமர், அங்கிருந்த வருகையாளர் பதிவேட்டில் நன்றி தெரிவித்து கையெழுத்திட்டார். நாட்டில் மிகக் குறைந்த விலை உணவு வழங்கப்படும் உணவகங்களில் நாடாளுமன்ற உணவகமும் ஒன்று. ரூ.12 இருந்தாலே இங்கு திருப்தியாக சாப்பிட முடியும். இங்கு 1 பிளேட் சிக்கன் பிரியாணியின் விலை ரூ.34 ஆகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in