

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 3 பாதுகாப்புப் படை வீரர்களும் இந்த மோதலில் உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஷுன்ரிச்சி கிராமத்தில் திங்கள்கிழமை மாலை இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து காஷ்மீர் மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியது: தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென சுடத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். முடிவில் அந்த வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் இருவருமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரி ஒருவரும், இரு வீரர்களும் இந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணமடைந்தனர். காயமடைந்த 4 வீரர்களில் இருவரது நிலைமை மோசமாகவே உள்ளது என்றார் அவர்.