Last Updated : 20 Mar, 2015 08:37 AM

 

Published : 20 Mar 2015 08:37 AM
Last Updated : 20 Mar 2015 08:37 AM

கருப்புப் பண மசோதா மக்களவையில் இன்று தாக்கல்?

வெளிநாடுகளில் சம்பாதிக்கும் வருமானம், சொத்துகள் பற்றிய விவரத்தை மறைப்பவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் கருப்புப் பண மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த வகை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தெரிவிக்கப் படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் (புதிய வரி விதிப்பு) மசோதா 2015-க்கு மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இந்த கூட்டத் தொடரை நீட்டிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீட்டிக்கப்படாவிட்டால் முதல்கட்ட கூட்டம் இன்றுடன் முடிகிறது.

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், அது குறித்து விவாதிப்பதற்கு முன்பாக நாடாளுமன்றக் குழுவின் பரிசீல னைக்கு அனுப்பி வைக்கப் படும். வெளிநாடுகளில் உள்ள சொத்துகள், வருமானம் தொடர்பான விவரங்களை மறைத்து வரி ஏய்ப்பு செய்து தவறிழைப்போருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்கிறது இந்த மசோதா.

இந்த மசோதாவின் புதிய விதிகளின்படி, வரி ஏய்ப்பு செய்வோர் பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொள்வ தற்காக தீர்வு ஆணையத்தை நாட அனுமதி இல்லை. மறைக்கப்படும் வருமானம், சொத்துகளுக்கான வரி மீது 300 சதவீத அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி செலுத்துவோர் அவர்களுக்கு வெளிநாடுகளில் சொத்து இருந்தால் அதை தெரிவிக்க ஒரு தடவை வாய்ப்பு தரப்படும். இதற்கான கால அளவு பற்றி இந்த மசோதா நிறைவேறிய பிறகு அறிவிக்கப்படும். சில மாதங்களுக்கே இந்த சலுகை இருக்கும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறினாலோ அல்லது தாக்கல் செய்யும் கணக்கு விவரத்தில் வெளிநாடுகளில் உள்ள சொத்து பற்றி முழுமையான தகவலை தெரிவிக்காவிட்டாலோ வழக்கு தொடரவும் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x