Published : 10 Mar 2015 09:03 AM
Last Updated : 10 Mar 2015 09:03 AM

நாடாளுமன்ற துளிகள்: பிஎஃப் திட்டத்தில் முறைகேடு

நேற்று மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:

புராதன சின்ன பராமரிப்புக்கு ரூ.193 கோடி

கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களைப் பராமரிக்க, நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரை ரூ.193.38 கோடியை அரசு செலவிட்டுள்ளது. கடந்த 2013-14-ம் நிதியாண்டில் ரூ. 169.63 கோடி செலவிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களைப் பாதுகாப்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும். ஆண்டுதோறும் சிறப்பு பழுதுபார்ப்பு பணிகள் செய்யப்படுகின்றன.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 3,685 பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு கனமழையால் டெல்லியில் உள்ள ஷெர் ஷா கேட்டின் சிறு பகுதி பாதிக்கப்பட்டது. அதனைப் புனரமைக்கும் பணிகள் வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும்

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு:

மேம்பாட்டுத் திட்டங்களை நாங்கள் அரசியல் கண்ணோட்டத்துடன் நோக்குவதில்லை. ரயில்வே துறை தேசிய சொத்து. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நல்ல கொள்கைகளை தொடர்வதுடன், அவர்கள் அறிவித்த நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

நிதி, நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அனுமதி, மரங்களை வெட்டுதல், சாலைகளில் பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைப் பொறுத்தே ரயில்வே திட்டப் பணிகள் நிறைவுறு கின்றன. இக்காரணிகள், ரயில்வே அமைச்சகத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை.

கட்டணக் குறைப்பை கண்காணிக்கவில்லை

விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு:

விமானங்களுக்கான பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதையடுத்து, விமானக் கட்டணத்தில் எரிபொருள் மீதான சர்சார்ஜ் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு ஆய்வு செய்யவில்லை. எரிபொருள் கட்டணம் குறைந்துள்ளதால், விமான இயக்க செலவு குறைந்துள்ளது. தற்போதுள்ள சட்டப்படி, விமானக் கட்டணம் அரசால் ஒழுங்குமுறைப் படுத்தப்படுவதில்லை.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக 6 விமான நிறுவனங்கள் மீது 39 விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 23 விதிமுறை மீறல்கள் ஏர் இந்தியா நிறுவனத்தால் செய்யப்பட்டவை. இதுதொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேறு துறைக்கு திட்டம் மாற்றம்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 மருத்துவக் காப்பீடு வழங்கும் ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் தற்போது தொழிலாளர் துறை அமைச்சகத்தால் பேணப்படுகிறது. இத்திட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்படும். தேசிய சுகாதாரத் திட்டத்தின் ஒருபகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2013-14-ம் நிதியாண்டு நிலவரப்படி 3.85 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் இதுவரை இத்திட்டத்தின் கீழ், ரூ.312.37 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பிஎஃப் திட்டத்தில் முறைகேடு

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:

நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை 12,100 நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்.) தங்களது பங்களிப்பைச் செலுத்துவதில் மோசடி செய்துள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரேதசம் ஆகிய மாநிலங்களில் இம்முறைகேடு அதிகளவு நடைபெற்றுள்ளது. நிறுவனங்கள் தங்களுடைய பங்களிப்பை டெபாசிட் செய்யவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிஎஃப் தொகைக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 8.67 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டுள்ளது. 2013-14, 2014-15ம் ஆண்டுகளில் தலா 8.75 சதவீதமும், 2012-13-ம் ஆண்டில் 8.50 சதவீதமும் வட்டி அளிக்கப்பட்டுள்ளது.

மின்துறையில் ரூ.69,108 கோடி இழப்பு

எரிசக்தி மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல்:

கடந்த 2012-13-ம் நிதியாண்டில் மின்துறையில் ரூ.69,108 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் இழப்பு, மின் திருட்டு, சராசரி விநியோக விலைக்கும், சராசரி வருவாய்க்கும் இடையில் உள்ள வித்தியாசம், கணக்கிடுதலில் தட்டுப்பாடு, மோசமான மின் கணக்கீடு மற்றும் கட்டண வசூல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்தைக் கடத்துவதற்கு ஆகும் செலவு பிஹாரில் அதிகபட்சமாக 54. 63 சதவீதமாகவும், கேரளத்தில் குறைந்தபட்சமாக 9.13 சதவீதமாகவும் உள்ளது. மாநிலங்களில் கடந்த ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி வரை 7,006 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்தது. அடுத்த 4-5 ஆண்டுகளில் 25,000 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.15.66 லட்சம் கோடி) இத்துறையில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் ரூ.6.27 லட்சம் கோடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்யப்படும்.

265 மில்லியன் டன் நிலக்கரி பற்றாக்குறை

நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயல்:

நிலக்கரி இறக்குமதி தேவை 2017-ம் நிதியாண்டில் 265 மில்லியன் டன்னை எட்டும். 2016-17-ம் நிதியாண்டில் உள்நாட்டு தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி 185-265 மில்லியன் டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி அளவைக் குறைக்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், வனத்துறை ஒப்புதல், நிலம் கையகப்படுத்துதலில் மாநில அரசுகளின் உதவியைப் பெறுதல், ரயில்வே துறை உதவியுடன் நிலக்கரியை கொண்டு செல்வது போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x