

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.
அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘கருத்துக் கணிப்புகளை வெளியிடு வது குறித்து தேர்தல் ஆணையம் பத்து வருடங்களுக்கு முன்பே கருத்தில் எடுத்து கொண்டது.
தேர்தல் ஆணையம் தன் பரிந்துரையில், தேர்தலின்போது சில குறிப்பிட்ட நாட்களுக்கு கணிப்புகளை வெளியிட தடை விதிக்கலாம் எனக் கூறியிருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை சில நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி வெளியிடுவதாக சில நாட்களுக்கு முன், புகார் எழுந்தது. ஒரு தனியார் தொலைக்காட்சி, ரகசிய கேமரா மூலமாக நடத்திய `ஸ்டிங் ஆப்ரேஷனுக்குப்பிறகு பிறகு இந்த சர்ச்சை கிளம்பியது.
இதுபோல், தவறான கருத்து கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள் மீது, ஆணையம் எடுக்க விரும்பும் நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட போது, இதை கவனத் தில் கொண்டு சட்டப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது ஆலோசிக்கப்படும் என்றார் சம்பத்.
காங்கிரஸ் மனு
காங்கிரஸ் சார்பில் மத்திய தேர்தல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு தொடர்பாக அஜய்மாக்கன் கூறியதாவது: ‘தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் நடத்தப்படும் கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.’ என்றார்.
கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட ‘ஸ்டிங் ஆபரேஷன்’ பற்றி குறிப்பிட்ட அவர், கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை எடுத்து வெளியிடுகிறார்கள் எனவும், அவர்கள் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜய்மாக்கன் வலியுறுத்தினார்.