

சிறுபான்மையினர் நலனை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில், மாநில சிறுபான்மை ஆணையங்களின் கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், "கர் வாப்ஸி தொடர்பாக பல்வேறு சர்ச்சைக் கருத்துகளும், வதந்திகளும் உலாவுகின்றன.
இந்த வேளையில் நான் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். மதமாற்றம் என்ற ஒரு நிகழ்வு எதற்காக நடக்க வேண்டும் என்பதே அந்தக் கேள்வி. மற்ற நாடுகளில் சிறுபான்மையினரே மதமாற்ற தடுப்புச்சட்டத்துக்கு வலியுறுத்துகின்றனர்.
ஆனால், இந்தியாவில் மட்டுமே மதமாற்ற தடுப்புச் சட்டத்துக்கு எதிராக பெரிய அளவில் குரல் எழுப்பப்படுகிறது. இத்தருணத்தில், மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ஏன் கொண்டுவரக் கூடாது என நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பல்வேறு சிறுபான்மையினர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன்.
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சட்டம், ஒழுங்கு மாநில அதிகாரத்துக்குள் வரும் விவகாரம் என்றாலும், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த எல்லை வேண்டுமானால் செல்வேன். சிறுபான்மையினர் மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை போக்க மோடி அரசால் மட்டுமே முடியும்.
இரண்டு நாய்கள் கடித்து சண்டை போட்டுக்கொள்ளலாம். ஆனால் இரண்டு மனிதர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். சண்டை, சச்சரவுகளில் இருந்து விலகி நிற்கும் புத்தி மனிதனுக்கு இருக்கிறதல்லவா? பின்னர் ஏன் மதத்தால் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். கடவுள் ஒருவரே, அவரை அவரவர் தம் விருப்பத்துக்கேற்ப பல்வேறு பெயர்களில் வணங்குகின்றனர்.
நம் மதத்தை நாம் பின்பற்றிக் கொண்டே பிற மதத்தினருடன் சகோதரத்துவத்தையும் பேணலாம். அப்படி இருந்தோம் என்றால் மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. மதமாற்றம் அவசியமற்றது. அவரவர் மதத்தை அவரவர் போதித்து பின்பற்றட்டும். ஆனால், அடுத்தவரை மதமாற்றம் செய்ய வேண்டாம். எனது இந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுவே உண்மை. இந்தியாவில் மட்டுமே அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ முடியும்.
சிறுபான்மையினரின் தேசப்பற்றும் போற்றுதற்குரியது. சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த எல்லைக்கும் செல்வேன்" என்றார்.