Published : 26 Mar 2015 12:08 PM
Last Updated : 26 Mar 2015 12:08 PM

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் 2 பேர் கைது: மேற்கு வங்க போலீஸ் அதிரடி

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில், முக்கிய குற்றவாளியை மேற்கு வங்க போலீஸார் மும்பையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். மற்றொருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்கனாபூர் அருகே ரனாகட்டில் ஜீசஸ் மேரி கான்வென்ட் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கும் இல்லமும் உள்ளது. இங்கு கடந்த 14-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் உள்ளே புகுந்து பள்ளியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. அதை தடுக்க வந்த 71 வயது கன்னியாஸ்திரியை அந்த கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு, ரூ.12 லட்சத்தையும் கொள்ளை அடித்து சென்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனர். பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் 4 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் உருவங் கள் அவற்றுடன் ஒத்துப் போக வில்லை. இதையடுத்து போலீஸார் அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டையில் இறங் கினர். இந்நிலையில், தெற்கு மும்பையின் நக்பாடா பகுதியில் பதுங்கி இருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர் சிக்கந்தர் ஷேக் (எ) சலீம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மும்பை போலீஸாரின் உதவியுடன் மேற்கு வங்க போலீஸார் சலீமை நேற்று அதிகாலை சுற்றிவளைத்துள்ளனர்.

பின்னர் மும்பையில் இருந்து சலீமை நேற்று ரனாகட் அழைத்து வந்து நீதிமன்றத்தில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கும்படி கூடுதல் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பபியா தாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து சலீமை சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து ரனாகட் பார் அசோசியேஷன் செயலர் மிலன் சர்கார் கூறுகையில், ‘‘மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் நீதிமன்றத்தில் வாதாட கூடாது என்று முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.

இதற்கிடையில், பலாத்காரம் தொடர்பாக கொல்கத்தாவில் மற்றொரு குற்றவாளியைப் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தீவிர சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை யாருக்கும் தெரியாத இடத்துக்கு மற்ற கன்னியாஸ்திரிகள் அழைத்து சென்று கவனித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x