Last Updated : 07 Mar, 2015 09:01 AM

 

Published : 07 Mar 2015 09:01 AM
Last Updated : 07 Mar 2015 09:01 AM

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதம் நிறைவு: மார்ச் 10-ம் தேதி தீர்ப்பு நாள் அறிவிக்க வாய்ப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை திடீரென முடித்துக் கொண்டதால் நீதிபதி அதிருப்தி அடைந்தார். இவ்வழக்கில் இரு தரப்பு வாதமும் நிறைவடைந்துள்ளதால் வருகிற செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தீர்ப்பு வழங்கப்படும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் னிலையில் 38-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.28 கோடி. அதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ரூ.13 கோடி. அவரது கட்டிடங்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட், சலவை கற்களின் மதிப்பு ரூ.3.62 கோடி. இவை அனைத்தும் அடிப்படை ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சியங்கள் மூலம் விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

திணறிய பவானி சிங்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்கார்டன், ஹைதராபாத் கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொறியாளர்கள் யார்? எதன் அடிப்படையில் ரூ.28 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது? அப்போதைய சந்தை மதிப்போடு ஒப்பீடு செய்யப்பட்டதா? இவ்வழக்கை பொறுத்தவரை கட்டிடங்களின் மதிப்பீடுதான் முக்கிய காரணியாக இருக்கிறது.

இதில் தான் சொத்து மதிப்பு அதிகமாக காட்டப்பட்டுள்ளது.

ஒரு சதுர மீட்டர் இத்தாலி வெள்ளை சலவை கல் எவ்வளவு? ஒரு சதுர அடி மற்ற வகை சலவை கல் எவ்வளவு? எதன் அடிப்படையில் அதன் மதிப்பு ரூ.3.62 கோடி என விசாரணை நீதிமன்றத்தில் நிரூபித்தீர்கள்?'' என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்த பவானி சிங், “100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இவற்றையெல்லாம் மதிப்பிட்டுள்ளார்கள். அவர்களை எல்லாம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் சிக்கல் இருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களைக் கொண்டு இந்த முடிவுக்கு வர வேண்டியுள்ளது'' என்றார்.

இவ்வளவு மிகைப்படுத்தி காட்டுவதா?

இதையடுத்து நீதிபதி, “ தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்திடம், “ஜெயலலிதாவின் வீட்டில் பதிக்கப்பட்டிருந்த ஒரு சதுர அடி சலவைக் கல்லின் அதிகபட்ச விலை எவ்வளவு?'' என கேட்டார். அதற்கு அவர், “கட்டிடத்தை மதிப்பிடும் போது நான் பணியில் இல்லை. 5 ஆயிரம் ரூபாய் இருக்கலாம்'' என்றார்.

இதனால் ஆச்சரியம் அடைந்த நீதிபதி, “1991-96 காலக்கட்டத்தில் ஒரு சதுர அடி சலவைக் கல்லின் விலை ஐந்து ஆயிரமா? எவ்வளவு விலை என எப்படி மதிப்பீடு செய்தீர்கள்? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா? ஜெயலலிதாவின் கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொறியாளர்களில் சிலரை வருகிற மார்ச் 9-ம் தேதி நீதிமன்றத்திற்கு அழைத்து வாருங்கள். அவர்களிடம் நானே விசாரித்துக்கொள்கிறேன்'' என நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி அதிருப்தி

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங், “இவ்வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை சில தவறுகளை செய்துள்ளது.

எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீட்டை விசாரணை நீதிமன்றம் முழுமையாக‌ ஏற்கவில்லை.எனவே நீதிபதி டி'குன்ஹா தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மதிப்பீட்டில் 20 சதவீதத்தை கழித்து,ஜெயலலிதா தரப்புக்கு சலுகை வழங்கினார்''என்றார்.

இதையடுத்து நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவின் உடைகள், தங்கம், வெள்ளி, வைர நகைகள், அலங்கார பொருட்கள், சுதாகரனின் திருமணம் செலவு, நமது எம்ஜி ஆர் நிறுவனத்தின் ரூ.14 கோடி வருமானம் ஆகிவற்றுக்கான ஆதாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், “எங்கள் கட்சிக்காரர்கள் குறித்த எந்த குற்றச்சாட்டுக்கும் அரசு தரப்பில் சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை. விசாரணை நீதிமன்றத்தில் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை'' எனக் கூறி, நீதிபதியின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமாக‌ பதிலளித்தார்.

திடீர் நிறைவு

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஜெயலலிதாவின் மற்றொரு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் பேச இருந்தார்.அதற்கு நீதிபதி “அரசு வழக் கறிஞர் பவானி சிங் இன்னும் நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. அதற்குள் அவரது இறுதி வாதம் முடிந்து விட்டதா?'' என கேட்டார்.

அதற்கு பவானி சிங், “இவ் வழக்கில் உங்களுடைய (நீதிபதி) கேள்விகளுக்கு எழுத்துபூர்வ மாக பதிலளிக்கிறேன்'' எனக் கூறி தனது இறுதி வாதத்தை திடீரென நிறைவு செய்தார்.

இதையடுத்து பவானி சிங் 200 பக்க அளவில் எழுத்துபூர்வமான வாதத்தையும், அதற்கு ஆதாரம் சேர்க்கும் விதமாக பல்வேறு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள் அடங்கிய 400 பக்க புத்தகத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

விரைவில் தீர்ப்பு

இவ்வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி எழுத்துபூர்வமான தனது இறுதி வாதத்தை வருகிற 9-ம் தேதி தாக்கல் செய்கிறார். அதனை தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது எழுத்துபூர்வ இறுதி வாதத்தை வருகிற 10-ம் தேதி தாக்கல் செய்கின்றனர்.

எனவே அன்றைய தினமே ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதியை நீதிபதி வெளியிடுவார் என நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x