Published : 08 Mar 2015 10:54 AM
Last Updated : 08 Mar 2015 10:54 AM

இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினை

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்து வருவதாக கருதப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றுடன் வங்கதேசம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. மேற்கு வங்கம் (2,217 கி.மீ), திரிபுரா (856 கி.மீ), மேகாலாயா (443 கி.மீ), அசாம் (262 கி.மீ), மிசோராம் (180 கி.மீ) என வங்கதேசத்துடன் நம் நாடு 4,096 கி.மீ நீள எல்லையை கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பேசப்படும் வங்காள மொழியே வங்கதேசத்திலும் பேசப்படுகிறது. உணவுமுறை, கலாச்சாரம் போன்றவற்றிலும் ஒற்றுமை காணப்படுகிறது. மேலும் தோற்றத்திலும் மேற்கு வங்க மக்களைப் போல் வங்கதேசத்தினர் இருப்பதால் அவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் எளிதாக ஊடுருவுகின்றனர்.

இவர்களில் பலர் வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு மீண்டும் தங்கள் நாட்டுக்கு தப்பியோடுகின்றனர். அல்லது சட்டவிரோதமாக இங்கேயே தங்கியும் விடுகின்றனர்.

அசாம் தேர்தலில் வங்கதேசத்தவர்

இவ்வாறு ஊடுருவுபவர்களுக்கு இங்கு சில மாதங்களிலேயே வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவை சட்டவிரோதமாக கிடைத்து வந்தன. இந்த வகையில் இவற்றை பெற்ற கமாலுத்தீன் என்ற வங்கதேசத்தவர், அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட, அசாம் உயர் நீதிமன்றம் 1996-ல் அவரை திருப்பியனுப்ப உத்தரவிட்டது.

ரூபாய் மதிப்பு குறைவு

இந்திய ரூபாயின் மதிப்பை விட வங்கதேச ரூபாயின் மதிப்புக் குறைவு. இதனால் இந்தியப் பகுதியில் ரிக் ஷா இழுப்பது, வீட்டு வேலை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக இவர்கள் எல்லையை கடந்து வருகின்றனர்.

மற்றொரு மாநிலமான திரிபுராவின் தலைநகரான அகர்தலா, வங்கதேச எல்லையிலேயே அமைந்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் இருந்து எல்லையை கடந்து காலையில் குடும்பத்துடன் இங்கு வந்துவிட்டு, மாலையில் பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்புபவர்களும் உண்டு. உருவத்தில் இந்தியர்களைப் போல் இருப்பதாலும், வங்காளம் மற்றும் அசாமி மொழி பேசுவதாலும் அவர்கள் பாதுகாப்பு படையினரிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றனர்.

மேலும் இந்தியாவின் நட்பு நாடுகள் பட்டியலில் வங்கதேசம் இருப்பதால், பாகிஸ்தானியர்கள் போல வங்கதேசத்தவர்களுக்கு நம் நாட்டில் தீவிர கட்டுப்பாடுகள் இல்லை.

வங்கதேசத்தைச் சேர்ந்த 2 கோடி பேர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக 2007-ல் மத்திய அரசு கூறியது.

வரலாற்றுக் காரணங்கள்

இந்த ஊடுருவல் என்பது, 1971-ல் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் பிரிந்து மற்றொரு முஸ்லிம் நாடாக உருவானபோது அதிகமானது. இதையொட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரால், அசாம் உட்பட இந்திய எல்லை மாநிலங்களில் வங்கதேச அகதிகள் வந்து தங்கி விட்டனர். இது போருக்குப் பிறகும் தொடரவே, பல்வேறு வகை பழங்குடிகள் நிறைந்த அசாம்வாசிகள் அதை எதிர்த்தனர்.

இந்த பிரச்சினையை முன்னிலைப் படுத்தி 1977-ல் தொடங்கப்பட்ட அனைத்து அசாம் மாணவர் அமைப்பு, பின்னர் அசாம் கன பரிஷத் என்ற கட்சியாக மாறியது. தொடர்ந்து அசாமில் ஆட்சியமைத்த இக்கட்சி, ஆகஸ்ட் 15, 1985-ல் மத்திய அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதன்படி, மார்ச் 25, 1971 வரை அசாம் வந்து தங்கியவர்களைக் கணக்கெடுத்து இந்தியர்களாக அங்கீகரிப்பது எனவும், மற்றவர்களை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்புவது எனவும் முடிவானது.

இந்தப் பணியை, மத்திய அரசு நாடு முழுவதுக்குமாக 1951-ல் அமைத்த, ‘குடிமக்கள் தேசிய பதிவேடு’ நிறைவு செய்யும் எனவும் முடிவானது. ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக அந்தப் பதிவுப் பணி அசாமில் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x