Published : 08 Mar 2015 10:29 AM
Last Updated : 08 Mar 2015 10:29 AM

செல்வ வரியை நீக்கியது சரியல்ல: 3 விஷயங்களில் மத்திய பட்ஜெட் தோல்வி - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், நாட்டின் நிதி ஸ்திரத் தன்மை உட்பட 3 விஷயங்களில் கவனம் செலுத்தாததால் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறி னார்.

சென்னை லயோலா கல்லூரி யின் வர்த்தக நிர்வாக மையம் (லிபா) சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த விவாதக் கூட்டம், கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங் கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

மத்திய அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், ஏழை மக்களுக்கு எதிராகவும் அமைந் துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாட்டின் பணவீக்கம் 12 முதல் 14 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. தேர்தலில் ஐ.மு. கூட்டணி அரசு தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். தற்போதைய பாஜக ஆட்சியில் பணவீக்கம் குறைந் துள்ளதாக கூறப்படுகிறது. பணவீக் கம் ஒரு அளவுக்கு அதிகரித்தாலும், குறைந்தாலும் அது நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர் களின் அனைத்து எதிர்பார்ப்பு களையும் நிதியமைச்சரால் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் செல்லும் திசையை நிர்ணயிக்க முடியும். நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை, அனைவருக்கும் சமமான வாய்ப்பு, ஏழைகளின் நலனுக்கு போதிய நிதி ஒதுக்காதது ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தாததால் பாஜக அரசின் பட்ஜெட் தோல்வியடைந்து விட்டது.

செல்வ வரி என்பது உலகம் முழு வதும் உள்ள நாடுகளில் வசூலிக் கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் இதை நீக்கியது சரியல்ல. ஏழை மக்களின் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி உள்ளிட்டவற்றுக்கு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, இந்த பட்ஜெட்டில் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2014-15ம் நிதியாண்டில் திட்டச் செலவுகளுக் காக ரூ.4.68 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது நடப்பு நிதி யாண்டில் 4.65 லட்சம் கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல, மாதிரிப் பள்ளி திட்டத்துக் கும் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இவையெல்லாம் ஒரு நல்ல பட்ஜெட்டுக்கான அறிகுறியாக அமையவில்லை.

இந்த பட்ஜெட் மூன்றுவிதமான பிரிவினர்களுக்காக வகுக்கப் பட்டுள்ளது. ஒன்று கார்ப்பரேட் நிறுவனங்கள், இரண்டாவது வரி செலுத்துபவர்கள், மூன்றாவது எஞ்சிய பிரிவினர். தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரம் நிறுவனங்களும், பதிவு செய்யப்படாமல் 20 ஆயிரம் நிறுவனங்களும் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சலுகையாக 30 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில், வருமானவரி கட்டும் 3.5 கோடி மக்களுக்கு எவ்வித வருமான வரி சலுகையும் வழங்கப்படவில்லை.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ‘லிபா’ மையத் தின் இயக்குநர் பேராசிரியர் ஆர்.மரியா சலத், பாதிரியார் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x