

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த எஸ்.ஜெய்சங்கர் ஜனவரி மாதத்தில் வெளியுறவுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அருண் சிங் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருண் சிங் தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக பதவி வகிக்கிறார். 1979-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான அருண் சிங் விரைவில் புதிய பதவியை ஏற்பார். எனினும் பிரான்ஸ் நாட்டுக்கு அடுத்த மாதம் பிரதமர் மோடி செல்ல உத்தேசித்துள்ள நிலையில் அந்த பயணத்துக்குப் பிறகே அருண் சிங் புதிய பதவியை ஏற்பார் என்று தெரிகிறது.
ஏப்ரல் மாதம் கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மோடி, வழியில் ஜெர்மனியில் தங்குகிறார். பயணம் முடித்து திரும்பும்போது பாரிஸ் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.