

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு ஆதரவிலான திட்டங்கள் அமலாக்கத்தில் எம்.பி.க்களும் உரிமையுடன் பங்கு பெற புதிய வழிகாட்டு நெறிகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீரேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவையில் அவர் கூறியதாவது: மத்திய திட்டங் கள் அமலாக்கத்தில் எம்.பி.க்களுக் கும் பங்கு இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற் காக புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட பரிசீலிக்கப்படுகிறது.
மத்திய திட்டங்கள் சம்பந்தமான அடிக்கல் நாட்டுவிழா அல்லது தொடக்க விழாக்களுக்கு தங் களுக்கு அழைப்புகூட வருவ தில்லை என நிறைய எம்.பி.க்கள் புகார் கூறுகிறார்கள். ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டங்கள் போன்ற திட்டங்கள் அமலாக்கத்தில் அவர்களுக்கு எந்தவித பங்கும் தரப்படுவதில்லை. இ்ந்த புகார்களை அரசு ஆராய்கிறது.
தேசிய வாழ்வாதார திட்டம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றின் அமலாக்கத்தில் நிறைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைகின்றன.
நற்பெயருடன் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே பணியை ஒப்படைக்கிறோம். ஊரக இளைஞருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தனியார், அரசு, சமூக அமைப்புகளுடன் இணைந்து நிறைவேற்றுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.