Last Updated : 06 Mar, 2015 11:58 AM

 

Published : 06 Mar 2015 11:58 AM
Last Updated : 06 Mar 2015 11:58 AM

பேச்சுரிமைக்கு எதிராக செயல்படும் இந்தியா: லெஸ்லி உட்வின்



பிபிசி செய்தி நிறுவனத்தின் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்துக்கு தடை விதித்துள்ளதன் மூலம் பேச்சுரிமைக்கு எதிராக இந்தியா செயல்படுவதாக அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார்.

லெஸ்லி உட்வின் இயக்கத்தில் உருவான 'இந்தியாவின் மகள்' (‘Storyville: India’s Daughter’) ஆவணப்படம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8-ம் தேதியன்று உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது. ஆனால், இந்திய அரசு ஆவணப்படத்தை தடை செய்ய எடுத்த முயற்சிகளையடுத்து குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே 5-ம் தேதி இரவே பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது.

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையாக எதிர்த்துள்ளதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளபோதும் லெஸ்லி அஞ்சவில்லை. தன் ஆவணப்படத்தை தகுந்த பரிசீலனையில்லாமல் தடை செய்துள்ள விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் லெஸ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக லண்டனில் பேசிய அவர், "நான் ஏற்கெனவே பலமுறை கூறியதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இந்த ஆவணப்படத்தின் கரு, இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்சினையை குறித்தது அல்ல. இப்பிரச்சினை உலகமெங்கும் இருக்கிறது.

இந்த ஆவணப்படம், மிகப்பெரிய மாற்றத்துக்கான ஓர் உபகரணமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது சமகாலத்தில் நடந்த ஒரு குற்றத்துக்கு எதிரான மிகப் பெரிய போராட்டம். இப்பெருங்குற்றத்துக்கு எதிரான இந்திய மக்களின் எதிர்வினையைப் பார்த்து நான் நெகிழ்ந்து போயிருந்தேன். ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையானது, இந்தியா பேச்சுரிமைக்கு எதிராக செயல்படுவதையே காட்டுகிறது" என்றார் அவர்.

பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தை 3,00,000 பேர் பார்த்தனர். ஆவணப்படத்துக்கு எதிராக பிபிசி நிறுவனத்தின் மீது 32 புகார்கள் பதிவாகின.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங், "பலாத்காரம் நடைபெறுவதற்கு ஆணைவிட பெண்ணுக்குதான் அதிக பொறுப்பு உள்ளது. பலாத்காரம் நடக்கும்போது அந்தப் பெண் திருப்பி சண்டை போட்டிருக்க கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும். பலாத்காரத்துக்கு அனுமதித்து இருக்க வேண்டும்" என கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x