

இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பாக கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
தனியார் பொழுதுபோக்கு இணையதளத்துக்கு அண்மையில் பேட்டியளித்த பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, "இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் வெறுப்புணர்வு வேதனையளிக்கிறது.
பாகிஸ்தானை எதிரியாக கருதும்படி இந்தியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். நான் அடிக்கடி பாகிஸ்தான் சென்றுவருகிறேன். பாகிஸ்தான் மீதான பார்வையை மாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுவது அவசியம்" என கூறியிருந்தார்.
இந்நிலையில், நசிருதீன் ஷாவின் கருத்துக்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், "பாகிஸ்தானை இந்தியர்கள் எதிரி நாடாகக் கருதும்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதாக கூறும் நஸ்ருதீன், பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துப் பேச வேண்டும்.
மும்பையில் கடந்த 2008-ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் தங்கள் உறவுகள், நட்பை, பிரியாமனவர்களை இழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்தால், நஸ்ருதீனின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். அண்மையில் காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த போலீஸ்காரர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தாயாரை நஸ்ருதீன் சந்திக்க வேண்டும். அப்போது தெரியும், வெறுப்புணர்வுக்கான காரணம்.
இத்தனைக்கும் பின்னரும் பாகிஸ்தான் மீது வெறுப்புணர்வு கூடாது என நஸ்ருதீன் கூறுகிறார் என்றால், கடந்த கால தாக்குதல்களை இந்தியர்கள் முற்றிலுமாக மறந்துவிட வேண்டும் என அவர் கூறுகிறாரா என தெரியவில்லை.
நஸ்ருதீன் ஷா அவரது கருத்துகளால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்திருந்த புகழுக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவர் முன்பு இதுபோல் இருந்ததில்லை. அடிக்கடி பாகிஸ்தான் சென்றுவரும் அவருக்கு யாரேனும் சூனியம் வைத்துள்ளனரா என சந்தேகிக்கத் தோன்றுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.