Published : 05 Mar 2015 09:49 AM
Last Updated : 05 Mar 2015 09:49 AM

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாணவர்கள் போராட வேண்டும்: ஒய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேச்சு

மக்களின் குறைகள், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாணவர்கள் போராட முன்வர வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மனித உரிமைகள் தொடர்பான தேசியக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் எம்.எஸ்.ஏ.ஜபருல்லா கான் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் எஸ்.அப்துல் மாலிக் தலைமையுரை ஆற்றினார்.

இதில், கலந்துகொண்ட நீதி யரசர் கே.சந்துரு பேசியதாவது:

மனித உரிமைகள் என்பது, மனிதனின் ரத்தமும் சதையுமாக கலந்து எப்போதும் இருப்பது. இதை பாடத்திட்டத்தில் சேர்த்து, மாணவர்கள் அதை படித்து மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமே போதாது. தமிழக எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்களது சிந்தனைகளை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதுபோல், சிறந்த தமிழ்க் கவிஞர்கள் இந்தக் கல்லூரியில் இருந்து உருவாகியுள்ளனர்.

சென்னையில் கூவம் கரையோர குடிசைகள் மற்றும் நடைபகுதிகளில் வாழ்ந்த மக்களை செம்மஞ்சேரி, கண்ணகிநகர் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து வருகின்றனர். ஆனால், அந்த இடங்களில் அவர்களுக்குரிய மருத்துவ வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதையும் ஒரு வகையில் மனித உரிமை மீறலாகத்தான் கருதவேண்டும். இதுபோன்ற சாதாரண மக்களின் உரிமைகள், பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக போராட கல்லூரி மாணவர்கள் முன்வர வேண்டும். தற்போதுள்ள மாணவர்களிடம் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்ட குணம் இல்லையோ என்ற கவலையும், அச்சமும் மற்றவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 25 கோடி பேருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது. தலித் மக்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள் மீதான மனித உரிமை மீறல் பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன. மத்தியில் தற்போதுள்ள புதிய அரசு பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. மதச்சார்பின்மை என்ற வார்த்தையை மாற்ற நினைக்கிறார்கள். இதையெல்லாம், கல்லூரி மாணவர்கள் பார்த்துக்கொண்டு சாதாரணமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. நீர், நிலம், காற்று என பஞ்சபூதங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைப்பதை மீட்க மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு நீதியரசர் சந்துரு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x