Published : 03 Mar 2015 12:37 PM
Last Updated : 03 Mar 2015 12:37 PM

என்.ஐ.டி.யில் எம்.சி.ஏ. சேர சிறப்பு நுழைவுத் தேர்வு

இளங்கலை பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் கணிசமானோர் எம்.சி.ஏ. எனப்படும் முதுகலை கணினி பயன்பாடு படிப்பில் சேர விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் எம்.சி.ஏ படிப்பில் சேர “டான்செட்” என அழைக்கப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

இதேபோல், தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிப்பில் சேர வேண்டுமானால் NIMCET என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் 11 என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு எம்.சி.ஏ. படிப்பில் 867 இடங்கள் உள்ளன. திருச்சியில் மட்டும் 92 இடங்கள் இருக்கின்றன. என்.ஐ.டி கல்வி நிறுவனம் மத்திய அரசுக்குச் சொந்தமானது என்பதால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உண்டு.

“நிம்செட்” நுழைவுத்தேர்வினைப் பி.எஸ்சி, பி.இ, பி.டெக் பட்டதாரிகள் எழுதலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. மேலும், பிளஸ்-2-வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு : 21 முதல் 25 வரை.

நுழைவுத்தேர்வில் கணிதம், பகுத்தாராயும் திறன் (Analytical ability and Logical reasoning), கணினி அறிவு, ஆங்கிலம் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்பார்கள். தவறான கேள்விகளுக்கு மைனஸ் மார்க் போடப்படும். எனவே, தெரியாத கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் விட்டுவிடுவதே நல்லது. இந்த ஆண்டுக்கான நிம்செட் நுழைவுத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வினை அகர்தலா (திரிபுரா) என்.ஐ.டி நடத்துகிறது. தேர்வுக்கு ஆன்லைனில் ( >https://nimcet2015.nita.ac.in) ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த ஆன்லைன் விண்ணப்பத்தைப் பிரிண்ட்-அவுட் எடுத்துத் தேவையான ஆவணங்களுடன் ஏப்ரல் 20-ம்தேதிக்குள் அகர்தலா என்.ஐ.டி.க்கு விரைவு தபால் அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை மே 8 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 10-ம் தேதி வெளியிடப்பட்டு விரும்பும் கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என்று என்.ஐ.டி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x