

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் தற்போதைய கொலிஜி யம் (நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழு) முறையிலேயே தொடர வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வெளிப்படைத் தன்மை எதுவும் இல்லாத இந்த கொலிஜியம் முறையால் தகுதியானவர்கள் நீதிபதிகளாக நியமனம் பெற முடியவில்லை என்று கூறி தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும், வெவ்வேறு உயர் நீதிமன்றங்களிலும் பலர் மனுக்களை தாக்கல் செய்துள்ள னர். இந்நிலையில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளதாலும் உச்ச நீதிமன்றம் மட்டும் இது தொடர்பாக விசாரணை நடத்தும் என்று கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்த ரவு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீ.அஜய் கோஷ் கூறியதாவது:
கொலிஜியம் முறையை விடவும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிப்பதால் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் முழுக்க முழுக்க தகுதியானவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் செய்யப் படுவார்கள் என்பதை நிச்சயமாகக் கூற முடியாது.
முழுமையான வெளிப்படைத் தன்மையும், தகுதியானவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் பெறவும் இவற்றையெல்லாம் விட சிறந்த வேறு முறை தேவைப் படுகிறது.
ஒரே விதமான பிரச்சினை அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை தொடர் பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அதே விவகாரம் தொடர்பாக வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங் களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டிருந்தால், அந்த மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத் துக்கு மாற்றுமாறு உத்தரவிட அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 139ஏ-ன் படி உச்ச நீதிமன்றத் துக்கு அதிகாரம் உள்ளது.
ஒரே தன்மையுள்ள வழக்கில் ஒவ்வொரு மாநில உயர் நீதி மன்றமும் வெவ்வேறு விதமாக தீர்ப்பளித்து விடக் கூடாது என்ப தற்காக, உச்ச நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உத்தரவிட்டதில் தவறேதும் இல்லை” என்றார்.