Published : 07 Mar 2015 10:10 AM
Last Updated : 07 Mar 2015 10:10 AM

பின்தங்கியவர்களுக்கு இலவச சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க டெல்லி அரசு முடிவு

டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்களுக் கான (ஈ.டபிள்யூ.எஸ்) படுக்கை களில் நோயாளிகள் அனுமதிக்கப் பட்டு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதைத் கண்காணிக்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த புதிய மசோதாவை அமல்படுத்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

நாடு முழுவதும், தனியார் மருத்துவமனைகள் கட்டுவதற்காக அரசு மற்றும் அதுசார்ந்த நிலங் கள் ஒதுக்கப்பட்டால், சில நிபந் தனைகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, மருத்துவமனை செயல்படத் தொடங்கினால் அங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (ஈ.டபிள்யூ.எஸ்) சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகளை இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.

பெரும்பாலான மருத்துவ மனைகள் இவ்விதிமுறையைக் கடைப்பிடிப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. டெல்லியில் இப்பிரச்சினையில் கவனம் செலுத்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

இது குறித்து `தி இந்து’விடம் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரி கள் கூறியதாவது: பொருளாதாரத் தில் பின்தங்கிய பிரிவினருக்காக தனியார் மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை கிடைக்கிறதா என தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வசதியை அவர்கள் தவறாகப் பயன்படுத்தாதபடி ஒரு சட்டதிருத்த மசோதா அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏழைகளுக் காக குறைந்த தொகையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு நிலங்களில் தனியார் மருத்துவ மனைகள் கட்ட முன்வரும் தொழி லதிபர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டுள்ளது” என்றனர்.

டெல்லியில் 45 தனியார் மருத்துவமனைகளில் சுமார் 650 படுக்கை வசதிகள் பொருளா தாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகள் அவற்றை அந்த பிரிவினருக்காக ஒதுக்குவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பில், இத் திட்டத்தைக் கண்காணிக்க சம்பந் தப்பட்ட மருத்துவமனைகளில் நோயாளிகள் நல அதிகாரி எனும் பதவியை உருவாக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த பதவிகளும் பெரும் பாலான மருத்துவமனைகளில் காலியாகவே உள்ளன.

ஒரு பெருநிறுவன குழுமத்தின் மருத்துவமனை நிர்வாகம், ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு இலவச மருந்துகள் விநியோகிப்ப தில் சிக்கல் இருப்பதாக தெரிவித் திருந்தது. இதையடுத்து, மருத் துவமனைகளின் அருகே மாநில அரசு சார்பில் மருந்தகங்கள் திறப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x