

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும் கருத்துகளை நாட்டு மக்கள் அனைவரும் இலவசமாக எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் திட்டம் நேற்றுமுன் தினம் தொடங்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) டிக் காஸ்டிலோ டெல்லியில் இதனை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் மூலம் செல் போன் வைத்திருக்கும் அனை வரும் மோடியின் ட்விட்களை இலவசமாக எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும். இதற்காக 011 3006 3006 எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும்.
ட்விட்டர் சம்வத் என்ற இத்திட்டத் தின் கீழ் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பெங்களூரு நகர காவல் துறை, குஜராத், கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், பிஹார் ஆகிய மாநில முதல்வர்களின் ட்விட்டர் பதிவு களையும் இலவச எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இது செயல்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் வாங்கிய சிப்டயல் நிறுவனம் மூலம் இந்த இலவச எஸ்எம்எஸ் அனுப்பப் படுகிறது.
மோடி டிக் காஸ்டிலோ சந்திப்பு
ட்விட்டர் இணையதள தலைமைச் செயல் அதிகாரி டிக் காஸ்டிலோ, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியாவில் சுற்றுலா மேம்பட ட்விட்டர் இணையதளத்தின் மூலம் உதவ வேண்டுமென்று மோடி அவரிடம் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வித் திட்டம் ஆகியவை மக்களிடையே பிரபலமடைய ட்விட்டர் எந்த அளவுக்கு உதவிகரமாக இருந்தது என்பதை டிக் காஸ்டிலோவிடம் மோடி கூறினார். அதே போல இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ட்விட்டர் இணையதளத்தின் மூலம் உதவ வேண்டும் என்றும், சர்வதேச யோகா தினம் ட்விட்டர் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானது என்று அவரிடம் தெரிவித்தார்.
“இந்தியாவில் ட்விட்டர் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக இந்தியாவின் இளைய தலைமுறையினர் ட்விட்டரின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றனர். இந்தியாவின் புதுமைகளை தெரிந்துகொள்ளவே இங்கு வந்துள்ளேன்” என்று மோடியிடம் டிக் காஸ்டிலோ கூறியுள்ளார்.