

ஸ்மார்ட் நகரம் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என்று நாடாளு மன்ற விவகாரங்கள் மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று வெங்கய்ய நாயுடு பேசியதாவது: மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் நகரம் திட்டம் தொடங்கும் தினத்தை நாங்கள் நெருங்கி வரு கிறோம். இந்த மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களும் பெற்றுவிடுவோம். அடுத்த மாதம் இத்திட்டம் தொடங்கும். அரசு வகுக்கும் விதிமுறைகளின்படியே இத்திட்டத்துக்கு நகரங்கள் தேர்வு செய்யப்படும். அரசியல் நிர்ப்பந்தம் உள்ள வேறு எவ்வித நெருக்குதல்களையும் ஏற்க மாட்டோம்.
துறைமுக நகரங்கள், சுற்றுலா நகரங்கள், மருத்துவம் மற்றும் கல்வி நகரங்கள் போல முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் கொண்டதாக ஸ்மார்ட் நகரங்களை மேம்படுத்த விரும்புகிறோம்.
மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தொழில்நுட்ப சேவை அளிப்பவர்கள், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், மத்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள் ஆகியவற்றுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டோம். இதனால் இதற்கு அதிக காலம் ஆகிவிட்டது.
எங்கள் யோசனைகளை தெரிவிக்கவும் பரிந்துரைகளை பெறுவதற்கும் மாநில அரசுகளிடம் 4 சுற்று ஆலோசனை நடத்தினோம்.
ஸ்மார்ட் நகரங்களை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.