

மின் உற்பத்தி திட்டங்களை மாநில அரசின் அதிகார வரம்புக்கு மாற்றுவது தொடர்பாக, மக்களை ஜம்மு காஷ்மீர் அரசு தவறாக வழிநடத்துவதாக கூறி, அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை நேற்றுமுன்தினம் காலை கூடியதும் தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா எழுந்து, மாநில மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து உள்ளூர் நாளேட்டில் வெளியான செய்தியை அவையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
அப்போது அவர் பேசும்போது, “தேசிய புனல் மின்சார நிறுவனத்துக்கு (என்எச்பிசி) சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை, சட்டரீதியிலான மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக மாநில அரசுகளுக்கு மாற்றித்தர இயலாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. மின் நிலையங்களை மத்திய அரசிடமிருந்து பெறப்போவதாகவும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் மாநில அரசு கூறுகிறது. மாநில அரசு, மக்களை ஏன் தவறாக வழிநடத்தவேண்டும்? இதற்கு அரசு பதில் அளிக்கவேண்டும்” என்றார்.
இதற்கு சட்ட அமைச்சர் பஷாரத் அகமது புகாரி பதில் அளிக்கும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்து குறுகிய காலமே ஆகிறது. மின் திட்டங்களை மாற்றுவது தொடர்பாக நடைமுறைகளை மாநில அரசு இன்னும் அதிகாரப்பூர்வமான தொடங்கவில்லை. மாநில அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது” என்றார்.
பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் நிர்மல் சிங்கும் இதே கருத்தை கூறினார். “உங்கள் ஆட்சியில் (ஒமர் ஆட்சியில்) நிறைவேற்ற முடியாததை நாங்கள் செய்துகாட்டுகிறோம்” என்றும் அவர் கூறினார்.
இந்த பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து அவையை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் கவிந்தர் குப்தா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை 5 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 3வது முறையாக அவை கூடியபோதும் கூச்சல் குழப்பம் நீடித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டும், மேஜையை தட்டியும், தாள்களை கிழித்து எறிந்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்ற முயன்றபோது அங்கு மோதல் ஏற்பட்டது. இதில் தேசிய மாநாடு உறுப்பினர் லார்வி மற்றும் அவைக் காவலர் ஒருவர் லேசான காயம் அடைந்தனர்.
இதன் பிறகும் எதிர்க்கட்சியினர் போராட்டம் தொடர்ந்ததால் அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பேரவைக்கு வெளியே முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறும்போது, “மின் உற்பத்தி திட்ட விவகாரத்தில் மக்களை மாநில அரசு முட்டாளாக்கி வருகிறது. இது தொடர்பான வாக்குறுதி மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக இடையிலான குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளது. ஆளுநர் உரையிலும் உறுதி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் நிலைப்பாடு வேறாக இருக்கும்போது, ஆளுநரை ஏன் பொய்யான தகவலை அளிக்கச் செய்யவேண்டும்? இதற்கு யார் பொறுப்பு? குறைந்தபட்ச செயல்திட்டம் தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவையிலும் எதிர்க்கட்சியினர் நேற்றுமுன்தினம் இந்த விவகாரத்தை எழுப்பி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியில் மேலவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.