

ஆந்திர மாநில புதிய தலைநகர் அமைக்க பொதுமக்கள் மாதத்தில் ஒரு நாள் ஊதியத்தை தர முன் வரவேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமைய உள்ள குண்டூர் மாவட்டம் அனந்தவரம் பகுதியில் அரசு சார்பில் யுகாதி விழா நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசியது: தலைநகருக்காக தங்களது நிலங்களை அரசுக்கு வழங்கிய இந்த பகுதி மக்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஒருவருக்கு கூட அநீதி நடக்காமல் பார்த்து கொள்வேன். ஆந்திர மாநிலத்தில் 2 அல்லது 3 நகரங்கள் ஹைதராபாத்தை போல் உருவாக்கப்படும். மாநில தலைநகரம் சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி போன்று அனைவரும் வியக்கும்படி அமையும். புதிய தலைநகர் அமைக்க பொதுமக்கள் அனைவரும் மாதம்தோறும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை தர முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
’தாத்தா’ ஆனார்
சந்திரபாபு நாயுடு, நேற்று ‘தாத்தா’ ஆனார். இவரது மகன் லோகேஷுக்கும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகள் பிராம்மனிக்கும் 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிராம்மனிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. யுகாதி பண்டிகை நாளன்று குழந்தை பிறந்ததால், இரு தரப்பு குடும்பத்திலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது.