

ஹைதராபாத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கு ஒரே ஊசியை உபயோகித்தததைக் கண்டித்து மருத்துவமனை முன்பு பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள நீலோஃபர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நூற்றுக்கணக் கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால் முக்கிய மருத்துவர்கள் வார விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் தலைமை நர்ஸ்கள், நர்ஸ்கள் மற்றும் சில மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில்,சனிக்கிழமை இரவு 2-வது மாடியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் 30 குழந்தைகளுக்கு நர்ஸ்களே மருத்துவம் பார்த் துள்ளனர். இவர்கள் ஒரே ஊசியில் 30 குழந்தைகளுக்கு ஊசி போட்டுள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு ரத்தம் கட்டி விட்டது. கை, கால்கள் வீக்கம் அடைந்தன. குழந்தைகள் வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழுதன. இதுகுறித்து அங்குள்ள பெற்றோர் கேட்டதற்கு, “எங்களுக்கு தெரியாதா” என நர்ஸ்கள் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலையில் மருத்துவமனை முன்பு கூடிய பெற்றோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தேவராஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.