

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றார். அதன்பின், உட்கட்சி பூசல் எழுந்துள்ளது.
கேஜ்ரிவால் மீது முன்னாள் எம்எல்ஏ.க்கள் பலர் பகிரங்கமாகப் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ‘ஆம்ஆத்மி டிரண்ட்ஸ்’ என்ற இணையதளத்தில் கட்சி நிதி பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த பிப்ரவரி 8-ம் தேதியில் இருந்து மார்ச் 7-ம் தேதி வரை உள்ள ஒரு மாதத்தில் ரூ.1 கோடிக்கு நிதி வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடத்தக்க அளவில் இடங்களைக் கைப்பற்றவில்லை. எனினும் அப்போதும் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு கட்சி நிதி வந்துள்ளது. தேர்தலின் போது நிதி திரட்டும் பொறுப்பு வகித்த கட்சி நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது, ‘‘நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனால், டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஆம் ஆத்மி மீது மக்கள் நம்பிக்கை வைத்து உதவி வருகின்றனர் ’’ என்றார்.