

சர்ச்சைக்குரிய ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை யூடியூப் பில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பிபிசி தயாரித்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அந்தப் படத்தை ஒளிபரப்ப கூடாது என்று டெல்லி நீதிமன்றமும், மத்திய அரசும் தடை விதித்தன. ஆனால், இங்கிலாந்தில் அந்த ஆவணப் படத்தை பிபிசி நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பியது. அதன்பின், ஆவணப் படம் யூ டியூப்பிலும் பதிவேற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், யூ டியூப்பிலி ருந்து அந்த ஆவணப் படத்தை நீக்க வேண்டும். ஏனெனில் அது மிக உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் யூடியூப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஆவணப்பட விஷயத்தில் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்து, அதை இணைய தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது’’ என்று நேற்று தெரிவித்தன.
இதுகுறித்து யூடியூப் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘சுதந்திரமான சமூகத்தில் தகவல்களை வழங்கு வது அடித்தளமாக இருக்கிறது என்று நம்புகிறோம்.
அந்த வகையில் மக்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் தெரிவிப்பதற்கு யூடியூப் உதவி வருகிறது. அதேநேரத்தில் சட்டவிரோதமான அல்லது விதிகளுக்குப் புறம்பான உள்ளடக்கங்கள் இருப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்தால் நிச்சயம் அதை நீக்கி விடுவோம்’’ என்று கூறினார்.